ஊர்புறத்தே ஓர் ஓலைக் குடிசையில்

ஊர்புறத்தே ஓர் ஓலைக் குடிசையில், செ.மு. குபேந்திரன், கவிநிலவன் பதிப்பகம், தருமபுரி, பக். 80, விலை 40ரூ.

கவிதைகளுக்குள் ஒரு புன்னகையை, ஒரு பூவை, ஒரு காதலை, ஒரு நட்பை, ஒரு கிராமத்தை, ஒரு பூகம்பத்தை ஒளித்து வைக்க முடியும் என்பதை உணர்த்தும் ஓர் எளிய கவிதைத் தொகுப்பு. தன் கிராமத்தின் சொர்க்கத்தைச் சொல்லி பட்டணத்தின் பவிசைச் சாடுவதும், தாய்மையின் அருமையை மனதில் பதித்துவிட்டுப் போவதும், சாதிக்கப் பிறந்தவனிடம் சாதியைக் கேட்டு தடைக்கல்லாய் இருக்கும் சமூக அவலத்திற்கு சவுக்கடி கொடுப்பதும் ஊர் புறத்தே உள்ள இந்த ஓலைக் குடிசையில் கவிதையாய் நடந்தேறியிருக்கிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/1/2014.  

—-

 

ஆனந்த தாண்டவம், K. குமரன், கே. டிரீம் வேர்ல்ட், இளங்கோ இல்லம், 37/19, 12வது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை 83, விலை 150ரூ.

பிறப்பிலிருந்தே மூளை முடக்குவாத நிலையில் பாதிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு வேறுபட்டு, தொடர்ந்து 23 ஆண்டுகளாக வலியோடு போராடி, ஒரு நிமிடம் கூடத் தனித்து நிற்க முடியாத நிலையிலும் வாழ்க்கையின் பாதையில் ஓடி, கல்வியில் உயர்நிலையான முனைவர் பட்டத்திற்கு உழைத்துக் கொண்டிருக்கும் நூலாசிரியர் கே. குமரனின் வாழ்க்கை வரலாற்று நூல். வாழ்க்கை இரு வகைப்படும். ஒன்று நினைத்த வாழ்க்கையை வாழ்தல். இன்னொன்று அமைந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு அனுபவித்தல். அமைந்த வாழ்க்கையை ஏற்று, நினைத்த வாழ்வையும் வாழும் மாற்றுத்திறனாளியான குமரன் இந்நூலெங்கும் மாற்றுத் திறனாளிகளின் இடர்பாடுகள், அவற்றுக்கான தீர்வுகள் பற்றி கூறியிருக்கிறார். இது வாழ்வின் எந்தவொரு பிரச்னைக்கும் கலங்கிப்போய், கண்ணீர் சிந்தி, பரிதாபமுற்று, பிறரின் கருணை வேண்டி நிற்கும் பலருக்கும், மாற்றுத் திறனாளிகளின் பெற்றோருக்கும் பயிற்சி தரும் அனைத்துத் துறை வல்லுனர்களுக்கும் பயனுள்ளதாகவும் உற்சாகம் தரும் அருமருந்தாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினத்தந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *