மனதெனும் குரங்கை வெல்லுங்கள்
மனதெனும் குரங்கை வெல்லுங்கள், ஆனந்த் பட்கர், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், ஏ2, ஷாஷ் சேம்பர்ஸ், 7ஏ, சர் பிரோஸ்ஷா மேத்தா ரோடு, போர்ட், மும்பை 4000001, பக். 288, விலை 350ரூ.
அனேகமாய் எல்லா அறிஞர்களும், மனித மனம் ஒரு குரங்கு என்பதை ஒப்புக் கொண்டிருக்கின்றனர். நொடிக்கு நொடி கிளைக்கு கிளை தாவும் குரங்கைப்போல், அலைபாயும் மனதை ஒரு முகப்படுத்தி, தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது என்பது, எளிதான காரியமல்ல, எனினும் முயன்று அரும்பாடு பட்டு வென்றவர்களும் உண்டு. இந்நூலாசிரியர் ஐந்து தலைப்புகளில் மனதை வெல்லும் வழிமுறைகளை மிக எளிய ஆங்கிலத்தில் விவரித்திருக்கிறார். பெரும்பாலும், கேள்வி பதில் வழியில் எழுதப்பட்டிருப்பது நூலுக்கு சுவை கூட்டுகிறது. தொழில் முறையில் சரி, தனிப்பட்ட வாழ்வுக்கும் சரி பெரிதும் பயன்படக்கூடிய நூல்.
—-
ஜுதான்(எச்சில்), ஓம் பிரகாஷ் வால்மீகி, ஆங்கிலமூலம் அருண்பிரபா முகர்ஜி, ஆங்கில வழித் தமிழில் வெ. கோவிந்தசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், பக். 194, விலை 150ரூ.
தலித்துகளுக்கு மற்ற இந்துக்கள் இழைக்கும் கொடுமைகளை விவரிக்கிறது இந்த நூல். வேலைக்கு கூலி தராமல் ஏமாற்றும் கொடுமை. பள்ளியில் தாகம் ஏற்பட்டால், குழாயின் அருகில் காத்திருக்கும் கொடுமை, விருந்துகளின் போது, வெளியே போடப்படும் எச்சில் உணவுக்காக காத்துக் கிடக்கும் அவலநிலை என்று இளமையில் தான் பட்ட வேதனைகளையும், பின் கஷ்டப்பட்டு படித்து முன்னேறிய போதும், தன் ஜாதிப் யெரால், தனக்கு ஏற்பட்ட வேதனைகளையும் படிப்பவர் மனம் குமுறும் வண்ணம் விவரித்துள்ளார் ஆசிரியர். மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகளை வணங்கும் இந்துக்கள், தலித்துக்களிடம் மட்டும் ஏன் இவ்வளவு வெறுப்போது நடந்து கொள்கின்றனர்? என்று வினா எழுப்புகிறார். சிந்திக்க வைக்கிறது அவரது கருத்துக்கள். -சிவா. நன்றி: தினமலர், 9/2/2014.