அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு

அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு, பில் பிரைசன், தமிழில் ப்ரவாஹன், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 400ரூ.

அறிவியல் அது கசப்பான பாடங்களில் ஒன்று. ஆனால் அறிவியல் சாதனைகள் கசப்பானவையா? இல்லையே. அப்புறம் எப்படி பாடங்கள் மட்டும் கசப்பானவையாக இருக்கிறது என்றால், அதனைக் கற்பிக்கும் முறைதான் அதற்குக் காரணம். அறிவியலை எளிமையாகச் சொன்னால், அதைவிட த்ரில் வேறு எதிலும் இல்லை. அப்படி எழுதப்பட்ட புத்தகங்களில் முதன்மையானது இது. அதனால்தான் பில்பிரைசனின் இந்தப் புத்தகம் உலகிலேயே அதிகமாக விற்பனை ஆன புத்தகங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. ஆரம்ப கால ஆதி மனிதர்கள் குறித்த இரண்டு அத்தியாயங்களை எழுதுவதற்காக 19 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்தால் பில் பிரைசன். இந்த இடங்களில் நடந்த 17க்கும் மேற்பட்ட அகழ்வாராய்ச்சிகளை நேரில் பார்த்தார். டார்வின் பற்றி எழுதுவதற்காக, காலோப்பாகஸ் தீவில் அவரைப் போலவே அலைந்து திரிந்தார். நியூட்டனைப் பற்றி எழுதுவதற்காக விவான்ஸ் என்னும் அறிஞரைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்றார். கடல் உயிரி ஆராய்ச்சிக்காக மத்திய பசிபிக் கடல் உள்பட 18 நாடுகளுக்குச் சென்றார். உலகில் வாழும் 2000 விஞ்ஞானிகளை நேரில் சந்தித்துப் பேசினார். அதற்குப் பிறகு ஒரு புத்தகம் எழுதினார். அதுதான் இது. இவருக்கு அறிவியலுக்கு வழங்கப்படும் அனைத்து விருதுகளும் கிடைத்தன. அதன் உச்சகட்ட மரியாதையாக பில் பிரைசன் விருது என்பதும் அவரது பெயரால் உருவாக்கப்பட்டுள்ளது. நான் விஞ்ஞானி அல்ல. அறிவியலின் அசைக்க முடியாத ஆதரவாளன். இந்தப் புத்தகம் எழுதுவதற்காக நான் செய்த பயணம், எந்த பள்ளி, பல்கலைக்கழகத்திலும் படிக்க முடியாதது. என் மாதிரி சராசரி ஆர்வம் கொண்ட இன்னொரு மனிதருக்கு கதை மாதிரியே பேச விரும்பினேன் என்று சொல்லிய பில் பிரைசன், இந்தப் புத்தகத்தில் சூரிய மண்டலம், புவியின் அளவும் நகர்வும், ஐன்ஸ்டீனின் பிரபஞ்சம், அபாயகரமான கோள், உயிரின் தோற்றம், செல்கள், டார்வின் கண்டுபிடிப்புகள், பனி யுகம், மனிதக் குரங்கு என்று விண்ணிலும் மண்ணிலுமான அனைத்தையும் சிறுகச் சிறுகச் சேகரித்து ஒரே புத்தகமாகக் கொடுத்துள்ளார். இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது ஆச்சர்யம், அதிர்ச்சி, பிரமிப்பு, துயரம், மனக்கொந்தளிப்பு என அனைத்து நிலைக்கும் மனம் தள்ளப்படும். மொழியியல், வாழ்க்கை வரலாறு, பயண நூல்கள் என பல்வேறு வகைப்பட்ட புத்தகங்களை எழுதிய அனுபவத்தால், அறிவியல் நூலை எழுதும்போது நல்ல சுவாரஸ்யமான கதையாடல் பில் பிரைசனுக்கு கை கொடுக்கிறது. அதுவே அறிவியலை நமக்கு அருகாமையில் கொண்டுவந்து நிறுத்தவும் செய்கிறது. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 16/2/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *