நிழலற்ற பயணம்
நிழலற்ற பயணம், பி.ஆர். சுபாஸ்சந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை 98, பக். 454, விலை 300ரூ.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஒரு சிறுவன், தந்தை மறைந்ததால் படிப்பை நிறுத்துகிறான். தாய்க்கு உதவ வீடுகளில் எடுபிடி வேலை செய்கிறான். இரவுப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கிறான். கடைநிலை ஊழியர், எழுத்தர் பணி, வழக்கறிஞர் பணி, காவல்துறை பணி என்று உயர்கிறான். அரசியலில் ஈடுபடுகிறான். மராட்டிய மாநில சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர், ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய மின்துறை அமைச்சர் என்று படிப்படியாக முன்னேறுகிறார். ஏழ்மையும் வறுமையும் சமூக ஏற்றத் தாழ்வுகளும் ஒரு மனிதனின் உயர்வுக்கு தடைக்கல் அல்ல, விடா முயற்சியும் உழைப்பும் இருந்தால் யாரும் முன்னேறலாம் என்று இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டும் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டோவின் வாழ்க்கை வரலாறுதான் இந்நூல். வெறும் வரலாற்று நூலாக இல்லாமல், இந்த வளர்ச்சிக்கு அடிப்படை எது? வளர்ந்த சூழலா? உருவாக்கிய நிகழ்ச்சிகளா? குடும்பப் பண்பா? எது? எவை? எதனால்? எவரால்? என்ற கேள்விகளுக்கான பதில்களை அலசியுள்ளார் நூலாசிரியர். அதுதான் நிழலற்ற பயணம்.
—-
கண்ட நாள் முதலாய், கார்த்திகேயன், RL பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிட், சென்னை, பக். 124, விலை 75ரூ.
கவிதைகளுக்கு எல்லை இல்லை என்ற நோக்கில் பல்சவைக் கவிதைகளை யாத்துள்ளார் கார்த்திகேயன். தமிழே அமுதே, இயற்கை, நாடு, பெண்ணியம், நட்பு, மனிதம், காதல் என்று எல்லா தளங்களிலும் தன் அனுபவங்களைக் கவிதையாக வடிக்கும் திறன் ரசிக்கக்கூடியதாய் உள்ளது. கள்ளிப்பால் கொடுமை பத்தி/கவிதையா எழுதயில/கவிதைக்கும் வலிக்குதம்மா/ என்ற வரிகள் தரும் வலி நம்மை ரணமாக்குகின்றன. கவிஞனின் பேனா காகிதத்தோடு உறவாட, காகிதம் கர்ப்பமாகும். கவிதை பிரசவமாக இதைவிட என்ன சொற்சித்திரங்கள் வேண்டும்? நன்றி: குமுதம், 19/2/2014.