அனுபவச் சுவடுகள்
அனுபவச் சுவடுகள், கே.எஸ். சுப்பிரமணியன், கவிதா வெளியீடு, சென்னை 17, பக். 192, விலை 125ரூ.
நூலாசிரியரின் வாழ்க்கை அனுபவங்களைக் கூறும் நூல். தமிழகத்தின் முன்னாள் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம், எழுத்தாளர் ஜெயகாந்தன், பணி நிறைவு பெற்ற நீதிபதி சந்துரு, அமர்சேவா சங்கத்தின் ராமகிருஷ்ணன் ஆகியோருடனான தனது நட்பு குறித்து நூலாசிரியர் விவரித்துள்ள சம்பவங்களின் மூலம் அவர்களைப் பற்றிய புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. இதேபோல, பிலிப்பைன்ஸில் ஆசிய வளர்ச்சி வங்கியில் பணியாற்றியபோது தனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களையும் சுவைபட விவரித்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களின் பண்பாடு, இயற்கைச் சீற்றங்களை அவர்கள் துணிவுடன் எதிர்கொள்ளும் பாங்கு ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. இந்த நூலில் தனது இளமைக்கால காதல், குடும்பம் குறித்து அதிகம் விவரிக்காமல் தனது நண்பர்களைப் பற்றியே விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழில் இருந்து பல நூல்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் என்னென்ன நூல்கள் என்பதைப் பட்டியலிடவில்லை. இந்த நூலுக்கு முன்னுரை இல்லாததால், நூலாசிரியரைப் பற்றி புதிய வாசகர்கள் அதிகம் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போனதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. நன்றி: தினமணி, 27/1/2014.
—-
சாயி தரிசனம், எஸ். லெட்சுமி நரசிம்மன், ஸ்ரீ சாயி மார்க்கம், 2/ஏ/2, சீதா இல்லம், தாராசந்த் நகர் மெயின்ரோடு, விருகம்பாக்கம், சென்னை 92, விலை 75ரூ.
சாயிபாபாவின் அற்புதங்கள் கூறப்பட்டுள்ளன. பாபாவின் தியானங்களை பற்றியும், அதன் அவசியங்களை பற்றியும் படிக்கும்போதே பரவசம் அடையும் வகையில் எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 10/10/2012.