அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே
அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே, பா. முருகானந்தம், விகடன் பிரசுரம், பக். 143, விலை 75ரூ.
கடவுளுக்குத் தெரியாமல் உலகத்தில் எதுவும் நடக்க முடியாது. அதுபோல இணையத்தில் உள்ள ரகசியங்களும் தெரியாமல் இருக்க முடியாது. எனவேதான், வாழ்வின் அந்தரங்க உறவுகள் இணையத்தில் பகிரங்கம் ஆகிவிட்டன. இணையத்தில் புகுந்து ரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் இணையற்ற துப்பறியும் மேதை ஆஸ்திரேலியர் ஜுலியன் அசாஞ்சே. இவர் தன் விக்கிலீக்ஸ் மூலம் பல நாட்டு ராணுவ ரகசியங்களை அம்பலப்படுத்தி அசரவைத்தார். கம்ப்யூட்டர் மூலம் சமூக அவலங்களை, லஞ்ச ஊழல்களை, அடக்குமுறைகளை அனைவருக்கும் பகிரங்கப்படுத்திய இவரை, ஆதிக்க சக்திகளால் அழிக்க முடியவில்லை. மண்ணில் வாழும் சிறந்த சிட்டிசன்போல, இணையத்தளக் குடிமகன் நெட்டிசன் இவர். 1980ல் கம்ப்யூட்டரின் மேல் மோகம் கொண்டு அதைக் கற்றுக் கொண்டு இடைவிடாத ஆய்வுகள் மேற்கொண்டார். பாதுகாப்பை உடைத்து ரகசியத்தை தெரிந்து கொள்ளும் ஹேக்கிங் மாயவித்தையின் மன்னரானார். 2008ல் கென்ய போலீசார் 300 பேரை கொலை செய்த படங்களை வெளியிட்டு மக்களை உறைய வைத்தார். அசாஞ்சே ஹைடெக் பயங்கரவாதி என்றும், பாலியல் வழக்குகளில் சிக்க வைத்தும், சிறையில் அடைத்துவிட்டனர். ஆயினும் அதில் எல்லாம் மீண்டுவந்தார். பல விருதுகளும் பரிசுகளும் பெற்றார். அசாதாரண துணிச்சல் மிக்க அசாஞ்சே சாகசங்கள், துப்பறியும் நாவல் படிப்பதுபோல், விறுவிறுப்புடன் உள்ளன. -முனைவர் மா.கி.ரமணன்.
—-
கல்வெட்டுக்கலை, பொ. ராசேந்திரன், சொ. சாந்தலிங்கம், பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை, பக். 240, விலை 250ரூ.
கல்வெட்டு இயல் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோருக்கும், தொல் பொருள் ஆய்வுக்கலை பயில்வோருக்கு பயிற்சி பெற உதவும் வகையிலும் அமைந்துள்ள அரிய நூல். நம் மொழியின் நடைமுறை எழுத்து வடிவம், கல்வெட்டுக்களில் காலந்தோறும், எப்படியெல்லாம் இடம் பெற்றிருக்கிறது என்பதை விவரிப்பதோடு உத்திரமேரூர் குடவோலை தேர்தல் கல்வெட்டு ஓலைச்சுவடிகளில் அமைந்த எழுத்துருக்கள், சிந்துவெளி முத்திரைகள், குகை ஓவியப் படங்கள், செப்பேட்டுப் படங்கள் ஆகியவையும் நூலில் அளிக்கப்பபெற்றுள்ளன. சக ஆண்டு சொல்லம் ஆண்டு, ஹிஜிரி ஆகிய ஆண்டுக்கணக்கை நடைமுறை ஆண்டுக் கணக்குடன் ஒப்பிடும் முறையை விவரித்திருப்பது மிகவும் பயனுள்ளது. -பவானி மைந்தன். நன்றி: தினமலர், 23/2/2014.