நான் கண்ட நகரத்தார்
நான் கண்ட நகரத்தார், அமுதா பாலகிருஷ்ணன், அமுதா பதிப்பகம், சென்னை, பக். 110, விலை 70ரூ.
தமிழகத்தின், ஏழாவது அதிசயம் என்று, கானாடுகாத்தான் ஊரில் உள்ள செட்டிநாட்டு ராஜா அரண்மனையை படங்களுடன் அதிசயிக்கும் நூலாசிரியர், சொக்கலிங்கம் புதூர், ஆத்தங்குடி, காரைக்குடி, குன்றக்குடி முதலிய ஊர்களின் வாயிலாக செட்டிநாட்டின் முழுச் சிறப்பையும் சுருக்கமாய்த் தந்துள்ளார். பல வாழ்வியல் நூல்களை எழுதி, இன்று முழுமையுடன் வாழ்ந்து வரும், நூலாசிரியரின் இப்பயண நூல் நகரத்தார் பற்றி அறிந்து கொள்ள ஒரு வழிகாட்டியாகும். -பின்னலூரான். நன்றி: தினமலர், 20/4/2014.
—-
வரலாற்றில் விழுப்புரம் மாவட்ட ஊர்கள், கோ. செங்குட்டுவன், பி.எஸ். பப்ளிகேஷன், பக். 244, விலை 200ரூ.
எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்தாலும், வரலாற்றின் வடுக்கள், நம் ஊர்களின் மீது இருக்கத்தான் செய்கின்றன. அவை நமது பாரம்பரியச் சிறப்புகளின் அத்தாட்சிகள் என்றும் கூறலாம். வரும் தலைமுறையினர், நம் இன வரலாற்றை வாழ்விட வரலாற்றுச் சிறப்புகளை அறிய வேண்டுமாயின் நடுகல், ஓவியம், கோவில், ஆறு, ஆண்ட அரசர் வரலாறு என, மிகுந்த கள ஆய்வுகளால் வெளிக் கொணரப்பட்ட செய்திகளைத் தொகுத்து, இது போன்ற நூல்களாக்கி வைக்க வேண்டும். இந்நூலில் ஐம்பது ஊர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் விவரிக்கப் பெற்றுள்ளன. விழுப்புரம் பெயர் விளக்கம் அரிய தகவல், குவாகம், சேந்தமங்கலம், தியாகதுருகம், திருவெண்ணெய்நல்லுர், பனைமலை, சிங்கவரம், ஜம்பை, செஞ்சி, தளவானூர் பற்றி எண்ணற்ற வரலாற்றுத் தகவல்கள் மற்றும் எண்ணாயிரம் என்னும் ஊரின் சிறப்புச் செய்திகள், இதுவரை பலரும் கேள்விப்பட்டிராத அருஞ்சிறப்பு உடையவை எனலாம். -கவுதமநீலாம்பரன். நன்றி: தினமலர், 20/4/2014.