நரேந்திர மோடி
நரேந்திர மோடி, சந்திமௌலி, அல்லயன்ஸ் கம்பெனி, பக். 168, விலை 150ரூ.
நேர்மையும் நிர்வாகத்திறமையும் மிக மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, கட்சிக்குள்ளும், வெளியிலும் எதிர்ப்புகளைச் சமாளித்து, சாதனையாளராக மாறியது எப்படி என்பதை விவரிக்கும் நூல். காலத்தின் கட்டாயத்தால் குஜராத்தில் மோடி முதல்வராகப் பதவியேற்ற சிறிது காலத்துக்குள்ளாகவே நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரமும் மாறாத வடுக்களாகத் திகழ்கின்றன. கலவரத்தின்போதும், அதற்கு முன்னர் 2001இல் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கடும் பாதிப்புகளைச் சீர் செய்யவும், அதன் பின்னர் குஜராத்தின் வளர்ச்சிக்கு நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளும் இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. நாட்டிலேயே முதன் முதலாக பேரிடர் மேலாண்மை நிறுவனம், தடய அறிவியல் பல்கலைக்கழகம், பெட்ரோலிய பல்கலைக்கழகம், காவல்துறையினருக்காக ரக்ஷா சக்தி பல்கலைக்கழகம் ஆகியவற்றை உருவாக்கியது. விவசாயத்துக்கு இலவசமாக இல்லாமல் கட்டணத்துடன் தடையில்லா மின்சாரம் வழங்கியது, விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கியது, சொட்டு நீர்ப் பாசனம், பருத்தி உற்பத்தியில் சாதனை படைத்தது, 99 சதவீத கிராமங்களுக்கு தரமான சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்தது, உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் சுமார் 300 அணைகளும், 30 ஆயிரம் தடுப்பணைகளும் கட்டியதால் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு கண்டது, மாநிலத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை 69 சதவீதத்திலிருந்து 79 சதவீதமாக உயர்த்தியது, படிப்பைத் தொடராமல் இடைநிற்றலை 21 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைத்தது, கர்ப்பிணிகளுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், சூரிய ஒளி மின்சார உற்பத்தி போன்ற சாதனைகளும், இதற்காக ஐ.நா.சபை, மத்திய அரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் விருது வழங்கியதும் இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மோடியின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, எதிர்ப்பாளர்களும் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினமணி, 21/4/2014.
—-
அளம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 210ரூ.
சொந்தநாட்டை விட்டு அயல்நாட்டில் வாழ்வாதாரம் தேடிச் செல்லும், ஒவ்வொரு குடும்பத்தின் நிலைப்பாட்டை பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் அருமையாக ஆசிரியர் சு. தமிழ்ச்செல்வி விவரித்துள்ளார். அதிக பணம் சம்பாதிக்கப்பட்டு மேலை நாடுகளுக்கு செல்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய அபூர்வ நூலாகும். பேச்சுநடையில் எழுதியிருப்பது மேலும் நூலுக்கு சிறப்பை தருகிறது. நன்றி: தினத்தந்தி, 23/4/2014.