சோர்விலாச் சொல்
சோர்விலாச் சொல், பாராளுமன்ற உரைகள் 1991-2011, பசீர் சேகுதாவூத், விளிம்பு, புத்தாநத்தம், விலை 250ரூ.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற செயல்பாட்டாளர் பஷீர் சேகுதாவூதின் நாடாளுமன்ற உரைகள் சோர்விலாச்சொல் என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது. அவரது சமூகம், அறம் சார்ந்த அணுகுமுறை, சமூக, அரசியல் நோக்கில் நாட்டின் எதிர்காலம் குறித்த புரிதல், இயங்குதளம், ஒரு இஸ்லாமியராக அவர் எதிர்கொண்ட மானிடச் சிக்கல்கள் என்பவற்றின் சான்றாக இவை உள்ளன. இன்றுவரை அறியப்பட்டிருந்த பஷீரின் ஆளுமையின் பன்முகத்தன்மையைச் சோர்விலாச் செல் வெளிச்சமிட்டுக்காட்கிறது. முஸ்லிம்களின்மீது படிந்த வரலாற்றுக் கரையை வெளிப்படுத்துகிற, திரைமறைவிலான முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை அம்பலப்படுத்துகிற உரைகள் ஒப்புதல் வாக்காகச் சோர்விலாச் சொல்லின் பக்கங்கள் முழுவதும் இழையோடியுள்ளன. பஷீர் புலிகளை மட்டும் விமர்சிக்கவில்லை. நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் இருந்துகொண்டு அரசையே குற்றம் சொல்லியிருக்கிறார். எழுச்சிமிக்க சமூகமொன்றை உருவாக்குவதற்கான தேவை இருப்பதை உணர்ந்தவராகப் பல இடங்களில் உரையாற்றியுள்ளார். தீவிரவாதப் பூச்சு இலங்கை முஸ்லிம் இளைஞர்களைப் பற்றிக்கொள்ளும் அபாயத்திலிருந்து காப்பாற்றும் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும், ஆயுத தாரிகளுக்கும் இருப்பதாக 2003ம் ஆண்டிலேயே பஷீர் கூறியுள்ளார். இதைத் தடுப்பதற்குரிய ஒரே வழி முஸ்லிம்களின் தலைவிதியை முஸ்லிம்களே எழுதும் வாய்ப்பை மறுக்காமல் இருப்பதே என்ற அவரது ஆணித்தரமான அறிவிப்பு பரிசீலிக்கத்தக்கது. இலங்கையில் முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்பட்ட இனக்குழுவாக இருப்பதிலுள்ள ஆபத்துகளை எதிர்கொள்வதற்கான மாற்று யோசனைகளை அல்லது இணங்கிச் செல்வதற்கான தந்திரோபாய அரசியல் வழிமுறைகளை அறிந்த ஒருவராகவே சோர்விலாச்சொல் பஷீரை அடையாளப்படுத்துகிறது. ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டோரின் பின்புலங்களை, உளவியல்பை, சமூகத்தின் சிடுக்குப் போக்குகளை விளங்கியவராகவும், தேசிய மதவாதம், இனம், மொழி, தேசிய பண்பாடு, பெருமை என்ற பல தளங்களிலும் விவாதிக்கும் தன்மையை பசீரின் சோர்விலாச் சொல் உரைகளில் காணமுடிகிறது. இந்நூலைப் படித்தபின் இலங்கை அரசியல் வரலாற்றையும் இலங்கைச் சமூக உளவியலையும் புரிந்துகொள்வதில் ஒரு தெளிவு கிடைக்கிறது. இந்த உரைகள் ஒரு நாட்டின் வரலாற்று நிகழ்ச்சிகளைத் தமக்குள் கொண்டிருக்கும் ஒரு தனியனின் பல்வேறு குறியீடுகளால் நிரம்பிய கருத்துகள், வாதங்கள். இவை அடிப்படைகள் பற்றிய மாறுபட்ட பார்வைகளுடன் அரசியல் பாடம் புகட்டுகின்றன. – ஸர்மிளா ஸெய்யித். நன்றி: தி இந்து, 18/6/2014.