பரம(ன்) இரகசியம்
பரம(ன்) இரகசியம், என். கணேசன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் லிமிடெட், சென்னை, விலை 550ரூ.
இலக்கியச் சிந்தனை உட்பல பல பரிசுகளைப் பெற்றவை இந்நூலாசிரியரின் படைப்புகள். சிறுகதைகள், நாவல்கள் மட்டுமின்றி ஆழ்மன சக்தி, ஆன்மீகம், சுய முன்னேற்றம், வாழ்வியல் போன்றவை குறித்தும், இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ப நவீன சிந்தனையுடன் இவரது படைப்புகள் உள்ளதால், வாசகர்களிடையே அவற்றிற்கு பெரும் வரவேற்பு உள்ளது. அந்த வகையில் 600 பக்கங்களுக்கு மேல் விரியும் இந்த நாவலும், ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பான, திகிலான, நிகழ்வுகளுடன் தொய்வின்றிக் கதை செல்கிறது. பல காலமாகச் சித்தர்களால் ரகசியமாக பூஜிக்கப்பட்டு வந்த விசேஷமான ஒரு மானஸ சிவலிங்கம், ஒரு கடத்தல் கும்பலால் திட்டமிட்டு, கொலைகளையும் செய்து, கடத்தப்படுகிறது. இந்த ஆரம்ப நிகழ்ச்சியைப் படிக்கும்போது, நாமே அந்தப் பயங்கரச் சூழலுககுள் தள்ளப்பட்டு, நம் கண்முன்னே அவை நடப்பது போன்ற பிரமையை உருவாக்குகிறது ஆசிரியரின் எழுத்தாற்றல். பிறகு அந்தச் சிவலிங்கத்தைக் கண்டுபிடித்து மீட்கும் பொறுப்பு ஒரு இளம் ஆழ்மன சக்தி ஆராய்ச்சியாளனுக்குக் கொடுக்கப்படுகிறது. இதில் பழைய ஓலைச் சுவடிகள், விஞ்ஞானக் கருவிகள், ஆராய்ச்சிகள், ஆழ்மன சக்தி, ஆன்மீகம் போன்ற விஷயங்களும் இக்கதையில் பின்னப்பட்டுள்ளன. தவிர சித்தர், பூசாரி, குருஜி போன்ற திகிலூட்டும் கதாபாத்திரங்களும், அமானுஷ்ய நிகழ்ச்சிகளும் கதை முழுக்கத் தொடர்வது படிக்கப் பரவசமாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது. -பரக்கத். நன்றி: துக்ளக், 25/6/2014.
—-
தமிழ்ச் செவ்வியல் இலக்கிய இலக்கண ஆய்வு முன்னோடிகள், பதிப்பாசிரியர்- த. மலர்க்கொடி, அய்யா நிலையம், தஞ்சாவூர், விலை 225ரூ.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரித் தமிழ்த்துறை உயராய்வு மையமும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் பல்வேறு தமிழ் அறிஞர்களால் வைக்கப்பெற்ற 20 கட்டுரைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 18/6/14.