மறைந்த தமிழகத் தலைவர்கள்
மறைந்த தமிழகத் தலைவர்கள், முக்தா சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், சென்னை, விலை 50ரூ.
தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்க்கை வரலாறுகளை தொடர்ந்து எழுதி வரும் முக்தா சீனிவாசன், இப்போது மறைந்த தமிழகத் தலைவர்கள் என்ற தலைப்பில் புதிய புத்தகம் எழுதியுள்ளார். மூதறிஞர் ராஜாஜி, பெரியார், அறிஞர் அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். உள்பட 10 தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் இதில் உள்ளன. வரலாறுகளை ரத்தினச் சுருக்கமாகவும், அதே சமயம் முக்கிய சம்பவங்கள் விடுபட்டுப் போகாமலும் திறமையாக எழுதியுள்ளார் முக்தா. நன்றி: தினத்தந்தி, 18/6/14.
—-
கண் ஒளி-வெகு தூரம் பாய்கிறது, என்.எஸ். சுந்தரம், கமலா பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.
மனித உறுப்புகளில் கண்களே முக்கியமானவை. கண்களை மிக கவனமாகப் பாதுகாக்க வேண்டும். கவனக் குறைவாக இருந்தால் பார்வையை இழக்க நேரிடும். பார்வைபோனால், உலகமே இருண்டுவிடும். கண்களைப் பற்றி அருமையான புத்தகத்தை பிரபல கண் மருத்துவ நிபுணர் என்.எஸ். சுந்தரம் எழுதியுள்ளார். கண்களுக்கு எந்தந்த நோய்கள் வரக்கூடும். அதைத் தடுப்பது எப்படி, கண் நோய்க்கான சிகிச்சைகள் என்ன… என்பது பற்றியெல்லாம், விளக்கமாகவும், எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலும் விவரித்துள்ளார். குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் தகுந்த மருந்துகளைச் சாப்பிட்டு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பார்வை பாதிக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார். புத்தகம் முழுவதும் ஆர்ட் காகிதத்தில், கண்ணைக் கவரும் வண்ணப் படங்களுடன் அச்சிடப்பட்டுள்ளது. பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 18/6/14.