அம்மா சொன்ன குட்டிக் கதைகள்
அம்மா சொன்ன குட்டிக் கதைகள், தொகுப்பு-சே. இளையகுமார், முத்துக்குமரன் பதிப்பகம், திண்டுக்கல், சென்னை 125ரூ.
தமிழக மக்கள் வாழ்க்கையில் கலை, இலக்கியம், இயல், இசை, நாடகம் ஆகியவை இரண்டறக் கலந்துள்ளது. இதனால் கதை மூலமாக சொன்ன கருத்துக்கள் மிக எளிதாக மக்களை சென்றடைவதால், தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா கதை மூலமாக பல நல்ல கருத்துக்கள், சிந்தனைகள் அடங்கிய குட்டிகதைகளை மேடைகளில் கூறிவருகிறார். முதல் அமைச்சரின் 66வது பிறந்த நாளையொட்டி 66 கதைகள் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதைக்கும் ஏற்றார் போன்று ஓவியங்களையும் நூலாசிரியர் இணைத்துள்ளார். இறைவனை நம்புங்கள், தர்மம் தலைகாக்கும், ராமா ராமா, பூவா தலையா, இவனைப்போல் வாழ், அறிவாளி, தந்திரம், கல்வி கொடு, கானல் நீர் போன்ற கதைகள் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 18/6/14.
—–
மகாபாரதம், கவிஞர் பத்மதேவன், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 320ரூ.
எத்தனை முறை படித்தாலும் சலிக்காத இதிகாசமான மகாபாரதத்தின் 18 பர்வங்கள் முழுமையாகவும், அத்துடன் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்தையும் கொண்ட இந்த நூல் விறுவிறுப்பான நாவல் போன்ற சரளமான மொழி நடையில் தரப்பட்டுள்ளது. கதை முழுவதும் எதுகை மோனையுடன் கூடிய சொற்றொடர்களால் கூறப்பட்டு இருப்பது இதனை படிப்பதற்கு மேலும் சுவை கூட்டுகிறது. மகாபாரத கதை நிகழ்ந்த இடங்கள், கதையில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள், அப்போதைய மன்னர்களின் வம்ச பரம்பரை ஆகியவை பற்றிய விவரங்களையும் கொடுத்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 18/6/14.