இது நிகழாதிருந்திருக்கலாம்
இது நிகழாதிருந்திருக்கலாம், ஜி.ஜே. தமிழ்ச்செல்வி, தாரணி பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 80ரூ.
ஒரு கவிதைப் பிரசவிப்பில் காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் பார்க்க முடியாது. இரண்டும் ஒன்றாகக் கலந்த ஒரு உயிர்ப்பு. முதல் காதலாகட்டும், முதல் முத்தமாகட்டும், முதல் ஸ்பரிசமாகட்டும் காமத்திற்கான முகவுரையாகவே உணரப்படுகின்றன. எந்த ஒரு முதல் காதலும் உடல் சம்பந்தப்பட்ட கவர்ச்சியாகவே நகர்கின்றன. தமிழ்ச்செல்வியின் ஒவ்வொரு கவிதைகளிலும் அவர் விட்டுச் செல்லும் காதலின் அடையாளம் நம்மை புது உலகிற்குள் பயணப்பட வைக்கின்றன. ஒரு பெண்ணின் காதல் வலிகளாகவே கவிதைகள் அனைத்தும் வலிக்கின்றன. நன்றி: குமுதம், 4/6/2014.
—-
குறள்நெறி நின்ற குணாளர் எம்.ஜி.ஆர்., ஓவியப் பாவலர் மு. வலவன், ஊர்ச்செய்தி பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 75ரூ.
எம்.ஜி.ஆர். பற்றி எவ்வளவு நூல்கள் வந்தாலும் அது பயனுள்ளதாகவே இருக்கும். இந்நூலும் அப்படித்தான். சாதனைக்கு, நடிப்புக்கு, பண்புக்கு, கொடைக்கு, அன்புக்கு, பாராட்டுக்கு என்று வலவன் ஒவ்வொன்றுக்கும் திருக்குறள் நெறியில் நின்று எம்.ஜி.ஆர். சாதித்ததை செய்தியாக படங்களுடன் பதிவு செய்துள்ளார் . எம்.ஜி.ஆரோடு நடித்தவர்கள், பழகியவர்கள், பாட்டு எழுதியவர்கள், அவருக்காகப் பாடியவர்கள் என்று ஒரு கலைஞரையும் விடாமல் எம்.ஜி.ஆரோடு நினைவு கூர்வது சிறப்பு. எம்.ஜி.ஆர். வரலாற்றைப் புதிதாக அறிந்துகொள்ள முனைபவர்களுக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம். நன்றி: குமுதம், 4/6/2014.