மதுக்குவளை மலர்

மதுக்குவளை மலர், வே. பாபு, தக்கைப் பதிப்பகம், சேலம், விலை 50ரூ.

சங்கக் கவிதைகளில் இருந்து தனித்திருத்தல் கவிதையில் இருந்துவந்த ஒரு வெளிப்பாடு. எமிலி டிக்கன்ஸன், ஸில்வியா ப்ளாத் போன்ற ஆங்கிலக் கவிஞர்களும் தங்களை படைப்புகளில் தனிமையை ஆதாரப் பொருளாக வெளிப்படுத்தினர். தொடக்க காலத் தமிழ் நவீனக் கவிதைகளிலும் இதன் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது. வே. பாபுவின் மதுக்குவளை மலர் தொகுப்பையும் இதன் கீழ் வகைப்படுத்தலாம். 90களில் இருந்து எழுதிவருபவரான வே. பாபுவின் இம்மதுக்குவளை மலருக்கு ஆதாரமாக இருப்பதும் தனிமைதான். அது அம்முவின் இல்லாமை உருவாக்கும் தனிமை. இந்தத் தனிமையிலிருந்து தப்பிக்கக் கவிதைகளை பாபு துடுப்பாக்குகிறார் எனலாம். இன்னொரு விதத்தில் இந்தத் தனிமை தரும் போதையை, இரண்டு நாளைக்கு முந்தையை மழையைச் சேகரித்து வைத்திருக்கும் நீர்க்குட்டையைப்போல் கவிதைக்குள் ஏந்தித் திளைக்க விரும்புகிறார் எனலாம். இத்தொகுப்பில் வெளிப்படும் மதுவையும் அம்முவின் இன்னொரு வடிவமாகவே பார்க்க முடிகிறத. இவை தவிர்த்து மரணமும், மரணச் செய்தியும், மலரும், பறவைகளும் வருகின்றன. இவை எல்லாமும் பெரும் துயரத்தைக் கொண்டு சேர்க்கின்றன. தாமிரபரணிக் கலவரம், வர்க்கப் பாகுபாடு எனச் சில கவிதைகள் சமூகக் கருத்துகளையும் பேசுகின்றன. தொகுப்புக்கு ஆதாரம் சேர்க்கும் இந்த அம்மு யார்? தோழியா, மனைவியா, காதலியா, அவள் விவாகரத்து பெற்றது யாரிடமிருந்து, எதற்காக, அது மகிழ்ச்சியானதா, துக்கமானதா? இப்படியாகக் கண்டடைய முடியாத சூட்சுமப் பொருளைத் தன் கவிதையின் வழியாக அம்முவுக்குச் சூட்டியிருக்கிறார் பாபு. அந்தச் சூட்சுமம் கவிதைக்கேயான அழகுடன் வெளிப்பட்டுள்ளது. அம்முவுக்காகப் பலகவிதைகள் காத்திருக்கின்றன. பல கவிதைகள் அம்முவின் வராமைக்காக வருந்தி, மது அருந்துகின்றன. அம்முவாகப் பாபு கட்டியெழுப்பும் உருவத்தில் சௌந்தர்யம் மிளிர்கிறது. இப்படி அம்மு பல்வேறு விதமாகத் தொடர்ந்து பாபுவின் கவிதைகளில் மிதந்து வந்துகொண்டிருக்கிறாள். அது ஏர் முனையின் கீழ் இருந்து சீதை தவழ்ந்து வருவதுபோல இருக்கிறது. பாரதிக்கு கண்ணம்மா, நகுலனுக்கு சுசீலா, கலாப்பிரியாவுக்கு சசி போல் பாபுக்கு இந்த அம்மு. கவிதைகளை மொழிய பாபு இத்தொகுப்பில் பலவிதமான வடிவங்களைக் கையாண்டிருக்கிறார். 90களில் இருந்து அவர் கவிதை மொழிக்குள் பயணப்பட்டிருப்பதை இவை உணர்த்துகின்றன. இழையிழையாகக் கோத்து தொடுக்கப்பட்டுள்ள சில கவிதைகளின் வடிவம் பலவீனமாக உள்ளன. ஒரு காட்சி வடிவத்தையும் பாபு முயன்றுள்ளார். மது விடுதியில் இருந்து திரும்பும்போது மூன்று கிலோமீட்டர் தூரம் என்பது ‘றுன்மூர்டட்மீலோகிதுறம்’ ஆகிவிடுகிறது. இது சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. கவிதைச் செறிவில் வலுவாக உள்ள பாபு வடிவ நேர்த்தியிலும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். -மண்குதிரை. நன்றி: தி இந்து, 11/6/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *