படைப்பாளிகளின் பார்வையில் பாவலர் வரதராஜன்
படைப்பாளிகளின் பார்வையில் பாவலர் வரதராஜன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 120ரூ.
இசைஞானி இளையராஜாவின் சகோதரர் பாவலர் வரதராஜன். பாடலாசிரியர், நாடக நடிகர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், பாடகர், கிராமிய இசையமைப்பாளர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர் பாவலர். அவரைப் பற்றி கே.டி.கே. தங்கமணி, எம். கல்யாண சுந்தரம், நல்லகண்ணு, ஐ. மாயாண்டி பாரதி, எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இந்த நூலை சங்கை வேலன் தொகுத்துள்ளார். பொதுவுடைமைக் கருத்துகளில் பாவலர் வரதராஜன் அளப்பரிய ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது படைப்புகள், மக்கள் நலனில் ஈடுபாடு, நாட்டுப்புறகலை இலக்கியங்களில் அவரது பங்கு ஆகியவற்றை இந்த நூல் மூலம் அறிந்துகொள்ளலாம். நன்றி: தினத்தந்தி, 25/6/2014.
—–
நோம் சோம்ஸ்கி பன்முக அறிவியல், பேரா. சி. அரங்கன், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை, பக். 230.
தொல்காப்பியர், பாணினி முதல், இன்றுள்ள மொழியியலாளர்கள் வரை, மொழி பற்றிய வருணனையைக் கொடுக்க முயற்சித்தனரே அன்றி, அவர்களால் சொல்லப்படாத மொழி பற்றிய விளக்கங்கள் பல உள்ளன. இன்றைய உலகில் நிகழும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் நம் மொழியைப் பற்றிய புரிதலை, நாம் வளர்த்துக் கொண்டாக வேண்டும். கணிப்பொறி மென்பொருள் உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழும் நாம், கணிப்பொறியில் நம் மொழிகளைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளைக் காப்பதிலும், முன்னோடிகளாகத் திகழ வேண்டும் அல்லவா? அத்தகைய ஆய்வுகளுக்கெல்லாம் வித்திட்டவர் அமெரிக்க நாட்டு மொழியியலாளராகிய நோம் சோம்ஸ்கியே. மொழியியலில், சோம்ஸ்கியின் தாக்கம், அவரின் மொழிகள் உறவியல், மொழிசார் தத்துவம், சோம்ஸ்கியும் அரசியலும் என்ற தலைப்புகளில் நூலாசிரியர் மிக விரிவாக, அவரது பங்களிப்பை விவரிக்கிறார். மொழியியல் பயில்வோருக்கு இந்நூல் பெரிதும் பயன்படும். -சிவா. நன்றி: தினமலர், 22/6/2014.