தமிழ் மென்பொருள்கள்
தமிழ் மென்பொருள்கள், முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன், நோக்கு, சென்னை, விலை 125ரூ.
அச்சுப்பணி, தகவல் தொழில்நுட்பம் என்னும் இரண்டுக்கும் உதவும் கணினி, அலைபேசி, இணையம் எனப் பல ஊடகங்களிலும் செயல்படும் முக்கியக் கருவியான தமிழ் மென்பொருள்கள் குறித்த பல கருத்துகளை விளக்குவதாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூல் மூன்று இயல்களைக் கொண்டுள்ளது. தமிழ் மென்பொருள்களுக்கு அடிப்படையான எழுத்துரு (font), குறியீட்டாக்கம் (Encoding), விசைப்பலகை (keybord), குறித்தும் இம்மூன்று அடிப்படைக் கூறுகளுக்கான ஒருங்குறி (Unicode) பங்களிப்பு குறித்தும் விரிவான பல கருத்துகள் ஆராயப்பட்டுள்ளன. கணினியைத் தமிழில் இயங்கவைக்கும் தமிழ் மென்பொருள்களின் அவசியம், உருவாக்கம், பயன்பாடு குறித்து விரிவான செய்திகள் தரப்பட்டுள்ளன. இந்நூல் தமிழ் மொழி வளர்ச்சியில் தமிழ் மென்பொருள்களின் பங்களிப்பை விளக்குகிறது. தமிழ் மென்பொருள்கள் குறித்து எளிய நடையில் அனைவருக்கும் விளங்கும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூலின் வழி பல்வேறு எழுத்துரு (font) உருவாக்கங்களால் ஏற்படும் சிக்கல்களை அறிய முடிகிறது. தமிழ் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ள பல்வேறு மென்பொருள்கள் குறித்தும் அவற்றின் உருவாக்கத்தில் ஏற்படும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது, அவற்றை மேம்படுத்துவது குறித்துமான பல விரிவான கருத்துகளை இந்நூல் ஆராயந்துள்ளது. -முனைவர் ந. ஆனந்தி. நன்றி: தி இந்து, 28/6/2014.
—-
நெட்வொர்க் தொழில் நுட்பம், மு. சிவலிங்கம், பாரதி பகத் பதிப்பகம், சென்னை, விலை 550ரூ.
கம்ப்யூட்டர் நெட்வொர்க் தொழில்நுட்பம் குறித்து அனைத்து தரப்பினரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில், எளிய தமிழில் வெளிவந்துள்ள நூல் இது. அறிவியல் தொழில்நுட்பக் கருத்துக்களை ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழில், எளிமையாகப் புரியும் வண்ணம் எடுத்துக்கூற முடியும் என்பதை நூலாசிரியர் இந்த நூல் மூலம் நிரூபித்துள்ளார். இந்த நூல் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பி.டெக். தகவல் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வகுத்துள்ள பாடத்திட்டத்தின்படி கம்ப்யூட்டர் நெட்வொர்க் தாளுக்குரிய அனைத்துப் பாடங்களையும் முழுமையாகக் கொண்டுள்ளது. நெட்வொர்க் தொழில்நுட்பம் குறித்து படிக்குமா மாணவர்களுக்கு மட்டுமின்றி இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வல்லுநுர்களுக்கும் இந்த நூல் சிறந்த கையோடாக விளங்கும். அனைத்துவகையான நெட்வொர்க்குகள் மற்றும் நெட்வொர்க் மேலாண்மை குறித்த தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 25/6/2014.