திரை இசை வாழ்க்கை
திரை இசை வாழ்க்கை, ஷாஜி, உயிர்மை பதிப்பகம், சென்னை.
வாழ்வின் குறிப்புகள் தமிழில் வெகுமக்கள் இசைமீதான விமர்சனத்தை மிகச் சிறப்பாக எழுதக்கூடியவரான ஷாஜியின் புதிய கட்டுரைத் தொகுப்பு நூல் இசை திரை வாழ்க்கை. இதில் இசை மட்டுமல்ல. அற்புதமான பல ஆளுமைகளின் வாழ்வையும் தன் தேர்ந்த கவித்துவமிக்க உரைநடை மூலம் பதிவு செய்திருக்கிறார். முதல் கட்டுரையான மைக்கேல் ஜாக்சனை எடுத்துக்கொள்ளுங்கள். அக்கட்டுரை மேற்கத்திய இசை தெரியாத ஒரு சாமானியனுக்கும் ஜாக்சனின் மேதைமையை அறிமுகப்படுத்தி அவருடன் நெருக்கமாக்குகிறது. ராஜேஷ் கன்னா, ஸ்டீவ் ஜாப்ஸ், டாக்டர் தம்பையா, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வர்கீஸ் குரியன், கிருஷ்ணா டாவின்சி போன்ற பல்வேறு தறைகளைச் சார்நத்வர்கள் பற்றி அவர் எழுதி இருக்கிறார். இசையைப் பற்றி ஷாஜி எழுதுகையில் பல கதவுகள் திறக்கின்றன. இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் ஆகிய இருவரையும் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரைகள் மிக முக்கியமானவை. குறிப்பாக இளையராஜ பற்றிய கட்டுரையில், வரலாறு எப்போதும் நம் கண்ணெதிரேதான் நிகழ்கிறது. ஆனால் அது காலத்தில் பின்னகர்ந்து பழையதாக ஆனபின்னரே நம்மால் அதைக் காணமுடிகிறது. இளையராஜா நம்கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வரலாறு என்கிறார். பல்வேறு செய்திகளை உணர்த்தும் வரிகள். இந்த நூலின் இறுதிக்கட்டுரையாக இடம்பெற்றிருக்கும் மெஹ்தி ஹசன் பற்றிய அஞ்சலிக் குறிப்புகளைப் படிக்கும்போது வாழ்நாளில் ஒரு கசல் பாடலைக்கூடக் கேட்டிராதவராக நீங்கள் இருக்கலாம். ஆனால் இறந்துபோன ஹசனுக்காக உங்கள் கண்கள் குளமாவதை நீங்கள் உணரமுடியும். உணர்வுகளை மொழியின்மூலம் அப்படியே வாசகனுக்கு மடைமாற்றிவிடும் அழகான எழுத்து ஷாஜியினுடையது. அவர் அதிகம் எழுதுவதும் இல்லை. பெரும்பாலும் தன்னைப் பாதிக்கும் நிகழ்வுகளின்போதே அவர் எழுதியிருக்கிறால். ஆனால் பல கட்டுரைகள் தவிர்க்க இயலாமல் அஞ்சலிக் கட்டுரைகளாக அமைந்துள்ளன. நன்றி: அந்திமழை, 1/7/2014.