பக்கம் பக்கமாய்
பக்கம் பக்கமாய், சுதா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
கவிதை உறவு இலக்கிய இதழில் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் எழுதிய ஒரு பக்க கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். வரலாற்றில், வாழ்க்கையில், நடைமுறையில் கண்டறிந்த உயர்ந்த சிந்தனைகளை கருவாக்கி, தன்னம்பிக்கையை எருவாக்கி, நல்ல எண்ணங்களை பயிராக்கி இருக்கிறார். இந்த நூலில் உள்ள 44 கட்டுரைகள் மூலம் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பண்புகளை கற்றுத் தருகிறார். இதமாக நடந்து கொண்டால் இமயமாக உயரலாம். எளிமையாக இருந்தால் எவரையும் கவரலாம் என்பதை சொல்லிக் கொடுக்கிறார். சின்ன சின்ன கட்டுரைகளில் அரிய பெரிய கருத்துகள். நன்றி: தினத்தந்தி, 2/7/2014.
—-
வலம்புரி இடம்புரிச் சங்கு பூஜைகளும் பயன்களும், உலகத் தமிழ்ப் படைப்பாளர் நூல் வெளியீட்டகம், திருச்சி, விலை 390ரூ.
சங்கில் இத்தனை விஷயங்கள் ஒளிந்திருக்கின்றதா? என்று வியக்க வைக்கும் நூல். சங்கின் பிறப்பு, வளர்ப்பு, அதன் வயது, காலம், வகைகள், பயன்பாடு, உபயோகம் என்று விளக்கி, புராணத்தில் இலக்கியத்தில் வரலாற்றில் எல்லாம் எப்படி போற்றப்படுகிறது, போற்றப்பட்டுள்ளது என்பதை ஆதாரத்தோடு விளங்க வைத்துள்ளார், நூலாசிரியர் மு. இலக்குமணப் பெருமாள். அங்கெங்கு என எண்ணாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற இறையில், இறை அம்சங்களில் சங்கினை ஓர் இறைப் பொருளாக மட்டுமின்றி இறையருளாகவே பார்த்து பிரமிக்கின்ற உணர்வை ஏற்படுத்துகிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 2/7/2014.