எனக்குள் எம்.ஜி.ஆர்.
எனக்குள் எம்.ஜி.ஆர்., காவியக் கவிஞர் வாலி, குமரன் பதிப்பகம், விலை 250ரூ.
சிலர் எதை எழுதினாலும் அது ரஸமாகத்தான் இருக்கும். வேறு மாதிரி அவர்களால் எழுதவே முடியாது. அந்த வகையைச் சேர்ந்தவர் மறைந்த காவியக் கவிஞர் வாலி. தமக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும் இடையே நிலவிய நெருக்கத்தை சுவைபட எழுதியிருக்கிறார் இந்தக் கட்டுரைகளில். நல்லவன் வாழ்வான் படத்துக்குப் பாடல் எழுத வாய்ப்புக் கிடைத்து அதற்கு அண்ணாவும் ஓ.கே. சொன்னதுபோது தாம் ஏழுமலையானுக்கு நேர்ந்து கொண்டபடி திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டுக் கொண்டு வந்தாராம் வாலி. அதைப் பார்த்து அண்ணா விவரம் கேட்க, வாலி தன்னுடைய வேண்டுதலைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அண்ணா உடனே சொன்னாராம், வாலி உங்க பாட்டை ஓ.கே. செய்ய வைத்தது உங்க எழுத்தே தவிர ஏழுமலையான் இல்லே. அத்துடன் நில்லாமல் திருப்பதி போயிட்டு வந்தா அஞ்சாறு பேருக்குச் சாப்பாடு போடணும் என்று சம்பிரதாயத்தைப் பற்றியும் வாலிக்கு நினைவூட்டினாராம் அண்ணா. அதன்படி நான்கைந்து பேருக்கு ஹோட்டலில் சாப்பாடு வாங்கிக் கொடுத்து அந்த சமாராதனையையும் நிறைவேற்றினாராம் வாலி. தம்முடைய திருமணத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லவில்லை என்று எம்.ஜி.ஆருக்கு வாலியின் மீது சற்று மனத்தாங்கல். அதனால் தாம் நடித்த ஒரு படத்துக்கு வாலி பாட்டு எழுதவேண்டாம் என்று சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர். அவரிடம் போய் மன்னிப்பு கேட்கச் சொல்லிப் புது மனைவி சொல்லியும் வாலியின் தன்மானம் இடந்தரவில்லை. கடைசியில் எம்.ஜி.ஆர். அழைப்பின் பேரில் தோட்டத்துக்குப் போய் அவரோடு அமர்ந்து இடியாப்பம், தேங்காய்ப் பால் அவரோடு அமர்ந்து இடியாப்பம், தேங்காய்ப் பால் சாப்பிட்டுவிட்டு சமாதானமாகியிருக்கிறார். அப்போது வாலி எழுதிய பாட்டில் ஒரு கவிஞனுக்கே உரிய கம்பீரத்தைக் காணலாம். தாழம்பூ திரைப்படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் இப்படித் தொடங்குகிறது. எங்கே போய்விடும் காலம்? அது என்னையும் வாழவைக்கும் – கொஞ்சம் இதயத்தைத் திறந்துவைத்தால் – அது உன்னையும் வாழவைக்கும். இந்தப் பல்லவியில் உள்ள குறும்பை ரசித்துச் சிரித்த எம்.ஜி.ஆர். உங்களைப் பயன்படுத்தக் கூடாதுன்னு ரெண்டு மாசமாத் தயாரிப்பாளர்கிட்ட சொன்னதுக்கு நீங்க பாட்டுல பதில் சொல்லியிருக்கீங்க என்று சீண்டவும் செய்தாராம். இப்படிப் பல சுவையான தகவல்கள் இடம் பெற்றுள்ள இந்த நூலில் ஒரு புதிய தகவலையும் தருகிறார் வாலி. அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் காவியத்தைத் திரைப்படமாக்கும் முயற்சியிலும் இறங்கினாராம் எம்.ஜி.ஆர். சிவகாமியாக பத்மா சுப்ரமணியம் அல்லது ஹேம மாலினையை மனதளவில் முடிவு செய்திருந்தாராம் எம்.ஜி.ஆர். நடன ஆசிரியர் கே.என். தண்டாயுதபாணிப்பிள்ளை உடனிருக்க, எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைக்க சிவகாமியின் நடனத்துக்கான பாடல் ஒன்றையும் எழுதினாராம் வாலி. வரச்சொல்லடி தோழி புலியூர் வாழ்வோனை நான்வாடும் இந்த நாழி வரச்சொல்லடி தோழி என்று தொடங்குகிற பாடல் அது. ஒவ்வொரு வரியையும் படித்து ரசித்த தலைவர் இது முத்துத்தாண்டவர் பதம் மாதிரி இருக்கிறது என்று சொல்லிச் சிலாகிக்கவும் செய்தாராம். திரைப்படப் பாடல்களோடு தமிழின் இனிமையையும் நுகர்ந்து அனுபவிக்க விரும்புவோருக்கு இந்த நூல் விருந்தாக அமையும். -சுப்ரபாலன். நன்றி: கல்கி, 6/7/2014.