நடராஜ தரிசனம்
நடராஜ தரிசனம், டாக்டர் சி.எஸ். முருகேசன், பக். 400, விலை 275ரூ.
ஆதியும் அந்தமும் முதல், எங்கும் சிதம்பரம் வரை, மொத்தம் 25 தலைப்புகள் இந்த நூலில் உள்ளன. அசையாத ஐந்தெழுத்து மந்திரத்தின் அசையும் வடிவம்தான் அவர் நடனம் என்ற ஆய்வுக் குறிப்பும், இறைவன் ஆடிய ஆதி நடனம் எது என்ற கேள்விக்கு, சங்க இலக்கியங்களுள் ஒன்றான கலித்தொகையிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பதும் சுவையானவை. இறைவன் ஆடிய ஆதிக்கூத்து, மூவகை தாண்டவத்திலிருந்து நூற்றெட்டு தாண்டவ வகை வரை அனைத்தையும் வரிசைப்படுத்தி, படங்களோடு பல செய்திகளை நூலாசிரியர் பல நூற் சான்றுகளோடு விளக்கி உள்ளார். பக்கத்திற்குப் பக்கம் அரிய செய்திகளோடும், அச்செய்திகளுக்குச் சான்றாக புகைப்படங்களையும் கொடுத்துள்ளார். மொத்தத்தில் நடராஜப் பெருமானின் தாண்டவ ரகசியங்களை நிறைவாக விளக்கிக் காட்டும் ஆழமான பதிவுகள். ஆன்மிக அன்பர்களுக்கு ஒரு ஞானப் புதையல். -குமரய்யா நன்றி: தினமலர், 7/9/2014.
—-
சைவ சமய குரவர்கள் வண்ணப்படக்கதை, கவுரி ராஜகோபால், தலைவர் ஸ்ரீ ராமகிருஷ்ணமடம், சென்னை, விலை 120ரூ.
சிவபெருமானை நேரில் தரிசித்து மகிழ்ந்து, அவருடைய பெருமையை தோத்திரங்களாக அருளியவர்கள் சமயக் குரவர்கள், சைவ சித்தாந்த சாத்திரங்களை அருளியவர்கள் சந்தானக் குரவர்கள். இதில் சந்தானக் குரவர்களை பற்றி கிடைத்த தகவல்களுடன், அந்த மகான்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வண்ணப்படங்களுடன் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பாக பிற்சேர்க்கையில் சைவசித்தாந்த குறிப்பும், சந்தான பரம்பரை, சைவ சித்தாந்த நூல்களை இயற்றிய ஆசிரியர்கள் போன்ற விவரங்களும் தரப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 10/9/2014.