உயிர்த்துளி உறவுகள்
உயிர்த்துளி உறவுகள், தேவிகாபுரம் சிவா, நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பக். 90, விலை 70ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-203-2.html முட்டைகளை அடைகாக்கும் அப்பா பெங்குயின்கள் பள்ளி மாணவர்களுக்காக புன்னகை உலகம் மாத இதழில் வெளியான கட்டுரைகளுடன், சில புதிய கட்டுரைகள் சேர்த்து இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. மாணவர்களை வாசகர்களாக கருத்தில் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும், பெரியவர்களும் ஆழ்ந்து படிக்கும் வகையில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பனிப்புயல், கடுங்குளிருக்கு நடுவில் பென்குயின்களில் அப்பாக்கள்தான் முட்டைகளை அடைகாக்கும். கூடு கட்ட தெரியாத இரு வாட்சி பறவைகள் குஞ்சுகளை வீடுகட்டி பாதுகாக்கும். இரவிலும் நன்றாக பறக்கும் அளவுக்கு காகத்துக்கு கண் தெரியும் என்பது போன்ற பலருக்கும் பரிச்சயமான விஷயங்களில், தெரியாமல் ஒளிந்திருக்கும் தகவல்களை நுணுக்கமாக விவரித்திருப்பது, கட்டுரைகளை சுவாரசியம் ஆக்குகிறது. புலி, சிறுத்தை இரண்டும் பூனை இனத்தை சேர்ந்தவை என்றாலும், புலிகள், மங்கோலியாவின் குளிர் பிரதேசங்களில் இருந்தவை. சிறுத்தைகள், வெப்ப மண்டல பகுதியான இந்தியாவையே தாயகமாக கொண்டவை (பக். 24). சிங்கத்தை எதிர்த்து நிற்கும் கரடி, சிங்கவால் குரங்குகளின் சிறப்பு இயல்புகள் (பக். 29) என, இந்நூலில் இடம்பெற்றுள்ள அரிய தகவல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பறவைகள், விலங்குகள், பாம்புகள், தேனீக்கள் வரை பல்வேறு வகையான உயிர்களின் வாழ்க்கை முறையை விவரிப்பதில், நூலாசிரியரின் எழுத்துக்களை தாண்டி, கானுயிர் ஆய்வாளர் தியோடர் பாஸ்கரனின் பங்களிப்பு தலைகாட்டுகிறது. (பக். 27) கானுயிர்கள் மட்டுமின்றி, சுனாமி, தண்ணீர் தட்டுப்பாடு, மிகப்பெரிய அருவிகள், சூழல் பாதுகாப்பில் மக்களின் கடமைகள் ஆகியவை குறித்து ஓரளவுக்கு தெளிவாக விளக்கப்பட்டிருந்தாலும், மாணவர்களுக்காக எழுதப்பட்டவை என்பதால், சில இடங்களில், பாடப்புத்தகம் படிப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஏற்கனவே தனித்தனியாக வெளியான கட்டுரைகள் என்றாலும் அவற்றை அப்படியே தொகுத்துவிடாமல், முடிந்தவரை தற்போதைய தகவல்களையும் சேர்த்து, தந்துள்ளார் நூலாசிரியர். அவரது முயற்சி பாராட்டத்தக்கது. -கிருஷ்ணமூர்த்தி. நன்றி: தினமலர், 21/9/2014.