நிகழ்காலம்
நிகழ்காலம், பொன். தனசேகரன், கார்த்திலியா புக்ஸ், சென்னை, பக். 126, விலை 90ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-276-3.html எதிர்காலத்திற்கான எச்சரிக்கை பருவநிலை மாற்றங்களால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள் அச்சமூட்டுகின்றன. உலகெங்கிலும் பருவநிலை மாற்றம் என்ற சொல்லாடல் கால் நூற்றாண்டு காலமாக விவாதிக்கப்பட்டு வரும் சூழலில் தமிழ்ச் சமூகத்தில் இது குறித்து குறைவாகவே அறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகச் சூழலில் பருவநிலை மாற்ற சிக்கல்கள் ஏற்படுத்துகிற விளைவுகளை முன்வைக்கிற பதிவாக பத்திரிகையாளர் பொன். தனசேகரனின் நிகழ்காலம் தமிழின் பசுமை இலக்கியத்திற்கு புதிய வரவு. பருவநிலை மாற்ற சிக்கல் தமிழகத்தின் சமூக சூழலியலில் ஏற்படுத்தும் பாதிப்பை நூலாசிரியர் கிடைத்துள்ள அறிவியல் மற்றும் கள சான்றுகளின் அடிப்படையில் எளிமையாக எடுத்துரைத்துள்ளார். குறிப்பாக பருவ நிலை மாற்றத்தின் விளைவான புவி வெப்பமடைதல் எவ்வாறு கடல் உயிரியலையும் நெய்தல் நில மக்களின் வாழ்வியலையும் சிதைக்கிறதெனச் சொல்கிறார். வளிமண்டலத்தில் அதிகளவு உமிழப்படும் கரிப்புகையால் கடலின் உட்பரப்பில் உள்ள பவளப்பாறைகளின் மறைவிற்கு வித்திடுகிறது. இப்படியான ஒரு அழிவுச் சங்கிலி வலைப்பின்னலை, ராமேஸ்வர கடற்பரப்பில் நிகழ்ந்துவருகிற பவளப்பாறைகளின் அழிவை கண்முன் நிறுத்துகிறார் நூலாசிரியர். நாகை மாவட்டத்தில் கோலா மீன் என்றழைக்கப்படுகிற குதிப்பு மீனின் இடப்பெயர்வு குறித்து பேசுகிறது. கால் நூற்றாண்டு காலத்திற்கு முன்பாக தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் 1822 டன்னாக கிடைத்த குதிப்பு மீன்கள் தற்போது வெறும் நூற்றி சொச்சம் டன் என்ற அளவில் சொற்பமாக கிடைப்பதை சுட்டிக்காட்டும் ஆசிரியர், புவி வெப்பமடைதலால் உயர்கிற கடல்நீரின் வெப்பநிலை இவ்வகை மீன்களை இடம்பெயரச் செய்கின்றன என கவனப்படுத்துகிறார். பருவக்காற்று பண்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மழைப் பொழிவு அளவின் குறைவிற்கு வித்திடுகிறதோ என்ற ஐயத்தை மெய்ப்பிக்கும் வகையாக, கடந்த சில ஆண்டுகளாக பொய்த்துப் போகிற பருவமழைக்கும் பருவநிலை மாற்றத்துக்குமான இணைப்பை மூன்று கட்டுரைகளில் நூலாசிரியர் விளக்குகிறார். தமிழகத்தில் குறைந்து வருகிற மழைப்பொழிவு அளவினை சுட்டிக்காட்டி எதிர்காலத்தில் மேலும் மோசமடையும் வாய்ப்புள்ளதை அண்ணா பல்கலைக்கழக ஆய்வு முடிவுகளை முன்வைத்து நூலாசிரியர் எச்சரிக்கிறார். பருவமழை பண்புகளில் ஏற்படுகிற மாறுபாடுகள் வறட்சிக்கு வித்திட்டு சமூகத்தை விளிம்பு நிலைக்குத் தள்ளுவதை பதிவு செய்கிறார். ஆந்திர மாநிரம் அனந்தபுர கிராம வேளாண்குடிகள், கடும் வறட்சியின் காரணமாக கொத்து கொத்தாக தற்கொலை செய்து கொள்வதை வேதனையுடன் குறிப்பிடுகிறார். வறட்சிக்கு மழை பொழிவில் ஏற்பட்டுள்ள மாcvcற்றத்தை மட்டும் காரணம் காட்ட முடியுமா? இன்றைய நவீன காலனியாதிக்க சூழலில் அரசு தொழிற்துறை சந்தைப் பொருளாதாரத்தை மட்டுமே கண்மூடித்தனமாக ஊக்குவிப்பதன் காரணமாக வேளாண்மைக்கான நீர் மேலாண்மைத் திட்டங்களை புறக்கணிப்பதும் மானியங்களை வெட்டுவதும் நடைமுறை. எனவே வேளாண்குடிகளின் தற்கொலைக்கு அரசின் குற்றவியல் பொருளாதரத்திற்குமான உட்தொடர்பை சுட்டிக்காட்ட தவறியுள்ளதை குறிப்பிட வேண்டியுள்ளது. பருவமழைப் பண்புகளில் ஏற்படுகிற மாறுபாடுகள் மனித சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு நிற்கவில்லை. இப்பூவுலகில் வாழ்ந்து வருகிற பிற உயிரினங்களின் வாழ்வையும் விளிம்பு நிலைக்குத் தள்ளுகிறது. அதற்கு உதாரணமாக மழை பொழிவு குறைவால் தமிழகத்தின் நீலகிரி மலையிலுள்ள தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை சுட்டிக்காட்டுகிறார் ஆண்டுக்கு 8 டன் என்ற எண்ணிக்கையில் கிடைத்து வந்த மலைத்தேன், தேனீக்களின் இடப்பெயர்வால் தற்போது ஆண்டுக்கு மூன்றரை டன் அளவே கிடைக்கும் செய்தியை முன்வைத்து இச்சிக்கலின் மற்றுமொரு பரிமாணத்தை விளக்க முற்படுகிறார். பனிப்பாறைகள் வேகமாக உருகிவருவதால் இந்தியாவுக்கு வரவிருக்கும் அபாயம் குறித்தான சுருக்கமாக பதிவு செய்கிறார். பருவநிலை மாற்றத்திற்கும் அதிகம் தொடர்பில்லாத சில கட்டுரைகளை தொகுத்துள்ளதை தவிர்த்திருக்கலாம். பருவநிலை மாற்ற சிக்கல்களின் விளைவுகளை கவனப்படுத்திய ஆசிரியர் இச்சிக்கலின் வேரை எடுத்துரைக்க தவறிவிட்டார். நூலாசிரியரின் வர்க்கப் பார்வையற்ற பொதுவான பார்வை ஏமாற்றத்தை அளிக்கிறது. புவி வெப்பமயமாதலுக்காக புழங்கப்படும் நிதியை நவதாராளவாத பொருளாதார திட்டங்களை அமுல்படுத்துவதற்காக பயன்படுத்திக்கொள்கிற உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம், சர்வதேச நிதியம் போன்ற அதிகார நிதிமையங்களையும் விமர்சிக்காமல் போனதும் ஏமாற்றமளிக்கிறது. மற்ற வகையில் சூழல் அரசியல் விவாதங்கள் பெருமளவு நடைபெறாத சூழலில், இந்நூல் பசுமை இலக்கிய வரிசையில் முக்கிய மைல்கல் என்றே கூறலாம். -அருண்நெடுஞ்செழியன். நன்றி: இந்தியா டுடே, 8/10/2014.