ஞானம் நுரைக்கும் போத்தல்
ஞானம் நுரைக்கும் போத்தல், குமரகுருபரன், ஆதிரை பதிப்பகம், திருநெல்வேலி, விலை 60ரூ.
பெருங்கதையைத் திறக்கிற சாவிகள் குமரகுருபரனின் கவிதை உலகம் சம்பாஷணைகளால் ஆனதாய் இருப்பது தற்செயலல்ல. பிரயத்தனம் கொஞ்சமும் இல்லாத சன்னதத்தின் வெளிப்பாடுகளை ஏதேனும் ஒரு கலையின் மூலமாய் வெளிப்படுத்துவது விடுபடுவதற்கான வழியாகலாம். இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் தொடங்குகிற இடத்தில் பெருங்கதையைத் திறக்கிற சாவியாகத் தோற்றமளிக்கின்றன. பேய்கள் மிகவும் நேர்மையானவை என்று தொடங்குகிறது ஒரு கவிதை. இன்னொன்று அரங்கங்கள் அற்ற நகருக்கு வந்திருக்கிறேன் என்று ஆரம்பிக்கிறது. எல்லோருக்கும் ஒரு வரலாறு இருக்கிறது என்பது இன்னும் ஒரு கவிதை. நிறைவாய் சொல்கிறேன் என்று சொல்லித் தொடங்கிக் கொள்கிறது இன்னொரு கவிதை. வாழ்வின் நிர்ப்பந்தங்களையும் நிராசைகளையும் பேசுவதை விட தனிமையின் அலைதல்களும் நனவு குறித்த தீவிரமான எதிர் மனோபாவமும் பரவலாகத் தொனிக்கின்றன. குமரகுருபரன் கடினச் சொற்களையோ முடுக்கித் திருப்பும் மொழிக் குறளிகளையோ கிஞ்சித்தும் முயலவில்லை. மாறாகத் தன் கவிதைகளிலிருந்து குடத்துளை வழியாக வேகமாய்த் தன்னை வெளியேற்றிக் கொள்ளும் நீர்மத்தின் முகாந்திரத்தோடு தன்னை வெளியேற்றிக் கொள்கிறார். இந்தத் தொகுப்பில் இருக்கும் மெல்லும் விழிகள் மற்றும் பிதாவின் கணக்கு, வழி தவறியவன் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தமான கவிதைகள். கடைசி காரியங்கள் மற்றும் அமைதியாக இருங்கள் ஆகிய கவிதைகள் ஆத்மாநாமின் ஏதாவது செய் கவிதைக்கு மிக நெருக்கமாகத் தொனிப்பது குறிப்பிடத்தக்கது. -ஆத்மார்த்தி. நன்றி: அந்திமழை, 1/10/2014.