திருக்குறள் தெளிபொருள்
திருக்குறள் தெளிபொருள், புலவர் வ. சிவசங்கரன், பொதிகை பதிப்பகம், சென்னை, பக். 304, விலை 70ரூ.
இம்மைக்கும், மறுமைக்கும் வழிகாட்டும் வாழ்க்கை நெறிமுறைகளின் தொகுப்புகளே மறைகள் (வேதங்கள்). அவையெல்லாம் ஏதேனும் ஒரு சமயத்தைச் சார்ந்து போதிப்பவையாக விளங்கும். ஆனால் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், சமயம் சாராத உலகப் பொதுமறையாக விளங்குவது. எனவே, உலகின் பல மொழிகளிலும் இது மொழியாக்கம் செய்யப்பட்டு, தமிழ் மொழிக்கே ஒரு தனிச் சிறப்பைக் கூட்டியுள்ளது. இலக்கிய இலக்கண வளமை மிக்க திருக்குறள், பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றாகவும், கடைச் சங்க காலத்தில் தோன்றிய தொன்மையும் மிக்கது. திருக்குறளை ஆய்வு செய்வோருக்கு அவரவர்களின் எண்ணங்களுக்கும், மதிநுட்பத்திற்கும் ஏற்ப புதுப்புது விளக்கங்களை நல்க வல்லது. எனவே திருக்குறளுக்கு அநேக தெளிவுரைகள் வெளியான வண்ணம் உள்ளன. இந்த வகையில் தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை மிக்கவரும், 35 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியவரும். தமிழுக்குச் சிறப்பு செய்யும் பல நூல்களை எழுதியவருமான இந்நூலாசிரியர், திருக்குறளின் 1330 பாக்களுக்கும், தெளிவுரை வழங்கியுள்ளார். செறிவு மிக்க ஒவ்வொரு ஈரடிப் பாக்களுக்கும், மூன்று வரிகளுக்குள், உள்ளார்ந்த பொருளுடன், சொற் சிதைவின்றி, சங்க இலக்கியங்களை ஒப்பு நோக்கி, மிக எளிய நடையில் தெளிவுரை வழங்கியுள்ளது சிறப்பாக உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் பயன் தரத்தக்கது இந்நூல். -பரக்கத். நன்றி: துக்ளக், 15/10/2014.
—–
குட் நைட், டாக்டர் டி. நாராயணரெட்டி, விகடன் பிரசுரம், பக். 168, விலை 100ரூ.
சொல்லி தெரிவது தான் மன்மத கலை என்பதை, விவரிக்கும் நூல். செக்ஸ் உணர்வு என்பது மிக இயல்பானதுதான். ஆனால் செக்ஸ் நடவடிக்கை என்பது எளிதானது அல்ல என விளக்கும் இந்நூல், இன்றைய நவீன உலகில், திணறும் தம்பதிகளின், இருள் பக்கங்கள் மீது, வெளிச்சத்தை பாய்ச்சுகிறது. கன்னித்திரை, கற்பின் சாட்சி, போதை மருந்துகள் உட்கொண்டால், அதிக நேரம் உறவு கொள்ள முடியும் உள்ளிட்ட, பல மூடநம்பிக்கைகளை, உடைத்தெறிந்துள்ளார். குழந்தையின்மைக்கு என்ன காரணம், பலவந்தம் ஆகாது, எண்ணிக்கையில் இல்லை இன்பம், ஆர்வமின்மைக்கு என்ன காரணம் உள்ளிட்ட, பல்வேறு விஷயங்களுக்கு, ஆசிரியர் விளக்கம் தருகிறார். இருபாலருக்கும் இருக்கும் சந்தேகங்கள் பலவற்றிற்கு, எளிய முறையில் விளக்கமும், தீர்வும் தந்திருக்கிறார். திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்களும், திருமணம் முடிந்தவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். -சிசு. நன்றி: தினமலர்,5/10/2014