நீதி வானில் ஒரு செந்தாரகை நீதி நாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர்
நீதி வானில் ஒரு செந்தாரகை நீதி நாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர், அ.மகபூப் பாட்சா, மதுரை சோக்கோ அறக்கட்டளை வெளியீடு.
அவசர நிலை பிரகடனத்துக்கு காரணமான வி.ஆர்.கிருஷ்ணய்யர் தீர்ப்பு நூறு வயதை கடந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் நீதிபதி கிருஷ்ணய்யரின் வாழ்க்கை வரலாற்றை கூறும், நீதி வானில் ஒரு செந்தாரகை நீதி நாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர் என்ற நூலை மீண்டும் படித்தேன். மதுரை சோக்கோ அறக்கட்டளை வெளியிட்டுள்ள நூலை அதன் நிர்வாக அறங்காவலர் அ.மகபூப் பாட்சா எழுதியுள்ளார். கிருஷ்ணய்யரின் அரசியல், சமூக பங்களிப்பை நூல் விவரிக்கிறது. 1915ல் பாலக்காடு அருகே உள்ள வைத்தியநாதபுரத்தில் பிறந்த தமிழர். தந்தை மலப்புரத்தில் வழக்கறிஞர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, சென்னை சட்ட கல்லூரிகளில் படித்தவர் கிருஷ்ணய்யர். தொழிற்சங்கம், பொதுவுடைமைவாதிகளுக்கு வழக்கு நடத்திய அவர், கடந்த 1952ல் சென்னை மாகாண குத்தும்பரா எம்.எல்.ஏ.வாக சுயேச்சையாக வென்றார். ராஜாஜி தலைமையிலான அரசின் செயல்பாடுகளை, சட்டசபையில் கடுமையாக விமர்சித்தார். கேரளம் தனி மாநிலம் ஆனதும், நம்பூதிரிபாட் அரசில், சட்டம், நீதி, நீர்ப்பாசனத்துறை அமைச்சரானார். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தை நிறைவேற்றியவர். தமிழர் என்பதால், தமிழகத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக, குற்றச்சாட்டுகளை சந்தித்தார். இப்போதைய உணவுக்கு வேலை திட்டத்தை, உழைப்பு தான திட்டம் என கேரளாவில் அப்போதே நிறைவேற்றியவர். தூக்கு விதிக்கப்பட்ட சி.ஏ. பாலன் என்பவரின் கருணை மனுவை, ஜனாதிபதி நிராகரித்த போது, மாநில அமைச்சரவை மூலம், தூக்கு தண்டனையை குறைத்தவர். இதற்காக, இநதிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் புதிய விளக்கங்களை தந்தவர். கம்யூனிஸ்ட்டுகள் பிரிந்தபின், பொதுவாழ்விலிருந்து விலகினார். அதன்பின் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிகளை வகித்தார். அலகாபாத் நீதிமன்றம், இந்திராவின் எம்.பி. பதவி செல்லாது என அறிவித்த தீர்ப்புக்கு தடை விதிக்க அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த கிருஷ்ணய்யர் மறுத்தார். இதனால்தான் அவசர நிலையை இந்திரா கொண்டு வந்தார். ஒருவேளை தடை விதித்திருந்தால் அவசர நிலையை இந்திரா அறிவித்திருக்க மாட்டார் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. அரசியல் அமைப்பு சட்ட முகவுரையில், இந்திய மக்களாகிய நாம் என சொல்லப்படும், வாசகத்துக்கு ஏழை எளிய மக்களைத்தான் அது குறிக்கிறது என்பதை விளக்கி, அதற்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் கிருஷ்ணய்யர் என, நூலாசிரியர் இந்நூலில் விவரிக்கிறார். -எழுத்தாளர் பாலமுருகன். செயலர், தமிழக மக்கள் சிவில் உரிமை கழகம். நன்றி: தினமலர், 23/11/2014.