சமூகம் வலைத்தளம் பெண்

சமூகம் வலைத்தளம் பெண், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 180ரூ.

பல்வேறு தலைப்புகளில் எழுத்தாளரும், பள்ளி ஆசிரியையும், கவிஞருமான தி. பரமேசுவரி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் பேத்தி. இந்தத் தொகுப்பில், அரசியல் கட்டுரைகள், சங்க இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், பெண்ணியக் கட்டுரைகள், நூல் மதிப்பீடுகள் என்று நான்கு வகையான கட்டுரைகள் அவரது புலமையைப் புலப்படுத்துகிறது. நூல் மதிப்பீடுகள் அவரது நடுநிலைமையை நிலைநாட்டுகிறது. பெண்ணியக் கட்டுரைகளில் அவரது ஆதங்கம் தெரிகிறிது. அரசியல் கட்டுரைகளில் அவரது ஆவேசம் புரிகிறது. தலைநகரை மீட்ட தலைவர் என்ற கட்டுரையில் தலையைக் கொடுத்தேனும் தலைநகரை மீட்போம் என்ற முழக்கத்துடன் சென்னையை மீட்க ம.பொ.சி.யின் வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. நன்றி: தினத்தந்தி, 10/9/2014.  

—-

கௌரவன், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, விலை 395ரூ.

பல ஆண்டுகளுக்கு முன், ஈ.வெ.ரா. பெரியாரின் வழிகாட்டுதலுடன், எம்.ஆர்.ராதா புதுவிதமான ராமாயணத்தை நாடகமாக நடத்தி வந்தார். அவருடைய ராமாயணத்தில், ராமன் கெட்டவன், ராவணன் மிக மிக நல்லவன். அதேபோல் மகாபாரதத்தை புதிய கண்ணோட்டத்தில் பார்க்கிறார், நூலாசிரியர் ஆனந்த நீலகண்டன். அவர் பார்வையில் துரியோதனன் நல்லவன்.அவனை நயவஞ்சகமாக பாண்டவர்கள் வீழ்த்துகிறார்கள். ஆயினும் அவர் மகாபாரதக் கதையை மாற்றி எழுதவில்லை. துரியோதனனுக்கு வக்கீலாக மாறினாலும் கதையைத் திறமையாக எழுதியுள்ளார். சூது விளையாட்டில் பாண்டவர்கள் தோல்வி அடைவதுடன், 626 பக்கம் கொண்ட முதல் பாகம் முடிவடைகிறது. மூல நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. அதை நாகலட்சுமி சண்முகம் (டி.கே.எஸ். சகோதரர்களில் ஒருவரான முத்துசாமியின் பேத்தி) அருமையாகத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 10/9/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *