உறங்கும் மனசாட்சி

உறங்கும் மனசாட்சி, ஆ. தமிழ்மணி, மந்திரச்சிமிழ் பதிப்பகம், சென்னை, பக். 246, விலை 140ரூ.

தினமணி, ஜனசக்தி நாளிதழ்கள், புதிய பார்வை உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த 52 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமகாலப் பிரச்னைகளைப் பற்றி இந்நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளும் அலசி ஆராய்கின்றன. நீர்வளத்தை எப்படிப் பாதுகாப்பது? கிரிக்கெட் விளையாட்டு அணியைப் பெரிய நிறுவனங்கள் விலைக்கு வாங்குவது சரியா? வியாபாரமயமான கல்விமுறையை மாற்றி அமைப்பது எப்படி? எனப் பல்வேறு சமகாலப் பிரச்னைகளுக்குத் தெளிவான தீர்வுகளை நூலாசிரியர் முன் வைக்கிறார். ஈராக் பிரச்னை பற்றிய கட்டுரையில் ஈராக்கில் அமைதி என்பது அங்கு வாழும் அனைத்து இன மக்கள் சார்ந்த ஒன்று. அதை வல்லாதிக்க நாடுகள் தீர்மானிக்க முடியாது என்று உறுதியாகக் கூறுகிறார். உணவு விஷமானால் என்ற கட்டுரையில் தற்போது விவசாயம் என்பது பன்னாட்டு வணிகக் கும்பலின் விளையாட்டுக் களமாகிவிட்டது. ரசாயன உரங்களின் பயன்பாடு விவசாயத்தில் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது என்று கூறுகிறார். நம்மைச் சுற்றியுள்ள உலகின் பல்வேறு பிரச்னைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நூல். நன்றி: தினமணி, 1/12/2014.  

—-

விக்டரி பிலிம் டைரக்டரி, பி.ஜெகதீசன், பிரைட் மீடியா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 600ரூ.

திரை உலகம் பற்றிய தகவல்களையும், படங்களையும் தாங்கி ஆண்டுதோறும் வெளிவரும் விக்டரி பிலிம் டைரக்டரி (ஆங்கிலம்) இந்த ஆண்டும் வெளிவந்துள்ளது. நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், இசை அமைப்பாளர்கள், தொலைக்காட்சி நட்சத்திரங்களின் வண்ணப்படங்கள் ஆர்ட் காகிதத்தில் அச்சாகியுள்ளன. நடிகர் – நடிகைகள் மற்றும் திரை உலகப் பிரமுகர்களின் முகவரிகள், டெலிபோன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. திரை உலகத்துடன் தொடர்பு கொண்டோரிடம் அவசியம் இருக்க வேண்டிய கையேடு. நன்றி: தினத்தந்தி, 3/12/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *