என் பயணம்

என் பயணம், அசோக மித்திரன், நற்றிணை பதிப்பகம், சென்னை, விலை 140ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-343-1.html அசோகமித்திரனுக்கு அறிமுகம் தேவை இல்லை. செறிவான உள்ளடக்கத்தை எளிமையாகக் காட்சிப்படுத்துவதன் மூலமாகத் தனது படைப்பைக் காலங்கள் கடந்தும் உயிரோட்டமாக வைத்திருக்கும் ஒரு சில எழுத்தாளர்களில் அசோகமித்திரனும் ஒருவர். அதைப்பற்றி அவர் அலட்டிக்கொள்வதில்லை என்பது மற்ற எழுத்தாளர்களில் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டும். மனிதர்கள் நடுவில் இருக்கிறேன். நான் எழுதும் எழுத்தை நான் புரிந்துகொள்ளும் வகையில் புரிந்துகொண்டு வாசிக்க ஒரு வாசகனாவது இருப்பான் என்றுதான் நான் எழுதுகிறேன் என்று அட்டகமாய் அவர் சொல்லிக்கொண்டாலும் அவரது எழுத்துகளைத் தேடித்தேடிப் படிக்கும் வாசகர்கள் அதிகம். மனிதர்கள் நடுவில் அவர் படைப்புகள் எப்போதும் இருக்கவே செய்கின்றன. புனைவில் தேர்ச்சிப் பெற்ற அனைவர்க்கும் கட்டுரைகள், பத்தி எழுத்துகள் கைகூடுவது இல்லை. அப்படி எழுத முயற்சித்தவர்கள் செயற்கையாகவும் மொண்ணையாகவும் எழுதிக்குவித்து, கெட்ட பெயரைச் சம்பாதித்ததுதான் மிச்சம். ஆனால் அசோகமித்திரனின் கட்டுரைகள், அவரது நாவல்களைப்போலவே நயமானவை. அப்படிப்பட்ட சில கட்டுரைகள் கோர்க்கப்பட்ட தொகுப்பு இது. சிறுவயதில் செகந்திராபாத்தில் இருந்துள்ளார் அசோகமித்திரன். அந்தக் காலக்கட்டம் பற்றிய நீண்ட கட்டுரை மிக மிக சுவாரஸ்யமானது. குறும்படம் எடுக்கத் தேவையான பல அம்சங்கள் அதில் இருக்கின்றன. அவரது நடையில் எப்போதும் எள்ளல் இருக்கும். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்று சொன்னபோது அவர் எழுதிய கட்டுரை இதற்கு உதாரணம். ஒரு மாட்டு வண்டியின் வேகத்தில் போகக்கூடும் இரு சக்கர வண்டியில் போகிறவர், விண்வெளி வீரர்கள் அணிவது போன்றதொரு தலைக்கவசத்தை அணிந்துகொண்டுபோவது அந்த இரு சக்கர வண்டியைக் கேலி செய்வதுபோல் இருக்கிறது. இந்தத் தலைக்கவசத்தையும் சேர்த்து சுமக்க முடியாது என்ற காரணத்துக்காகத்தான் இந்த வண்டிகள் கிளம்ப மறுக்கின்றனவோ? என்கிறது அசோகமித்திரனின் கிண்டல். ஒருவன் எழுதியதோடு அவன் பணி முடிந்ததாகக் கருதி அவனை எழுத்தாளன் என்று யாரும் அழைப்பதில்லை. அவன் எழுத்தைப் படித்தபிறகுதான், அந்த எழுத்து சிறிதாவது பாதிப்பு ஏற்படுத்தினால்தான் ஒருவன் எழுத்தாளன் என்று கருதப்படுவான். அவன் எழுதியதற்கும் அவன் எழுதியதை  நாம் படிப்பதற்கும் இடையில் ஒரு நெடுந்தூரப் பிரயாணம் இருக்கிறது. இந்தப் பிரயாணத்தை எழுத்தாளன்தான் முயற்சி மேற்கொண்டு முடிக்க வேண்டியிருக்கிறது. அவன் எழுதுவதில் உள்ள திடமும் விடாமுயற்சியும் பிரசுரமாவதற்கு எடுத்துக்கொள்ளும் எத்தனங்களிலும் சிறிதே குறைந்தாலும் அவன் எழுத்து உலகுக்குக் கிடைப்பதில்லை. இப்படி எவ்வளவு பேருடைய அற்புதமான எழுத்துகள் உலகுக்குக் கிடைக்காமல் இருக்கிறதோ? என்ற வரிகள் மனதைக் கனக்க வைக்கின்றன. இப்படி ஒரு படைப்பாளியின் பரந்த மனம் வெளிப்படும் இடம் எத்தனையோ உண்டு இந்தப் புத்தகத்தில். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 3/12/2014.

Leave a Reply

Your email address will not be published.