வீரசாவர்க்கர்

வீரசாவர்க்கர், ஷிவ்குமார் கோயல், தமிழில் பி.ஆர். ராஜாராம், விஜயபாரதம் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-1.html ஒரு போராளியின் கதை பாரதம் சுதந்திரம் பெறுவதற்காகப் பலரும் பலவிதங்களில் போராடினார்கள். அவர்களில் முக்கியமானவர்களுள் ஒருவர் விநாயக தாமோதர சாவர்க்கர் என்னும் வீர சாவர்க்கர். மிக அதிகமான தண்டனையை ஐம்பது ஆண்டுகள் கடுங்காவல் பெற்றவர் இவர். கொள்கையளவில் மகாத்மாவுடன் ஒத்துப்போக முடியாதவரான சாவர்க்கர் அவருடைய கொள்கைகளைத் தாக்கி, மராட்டி மொழியில் காந்தி கட்பட் என்று ஒரு நூலை எழுதினார். அவ்வாறே ஜோஸஃப் மாஜினி என்று தாம் லண்டனில் இருந்தபோது 1907ஆம் ஆண்டில் ஒரு நூலை எழுதினார். அது வெள்ளைக்கார அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டு, நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகே தடைவிலக்கப்பட்டு மறுபதிப்பு வெளிவந்துள்ளது. தேசத்தின் தோல்விக்கு மகாத்மாவின் அஹிம்சை முறைதான் காரணம் என்ற கருத்துடையவர் சாவர்க்கர். எதிராளியின் மீது அஹிம்சை காட்டுவது ஒரு பாவச் செயல் என்றே கூறியிருக்கிறார். இன்றைக்கு விரோதியேயானாலும் சம்பிரதாயத்துக்காகவேனும் கண்டிக்கிறோம், அனுதாபப்படுகிறோம் என்று சொல்லக்கூடிய போலியான சூழல் உருவாகியுள்ளது. ஆனால் ஸர் கர்ஸன் வாயிலி என்ற ஆங்கிலேய அதிகாரியை பஞ்சாபி இளைஞன் மதன்லால் திங்கரா சுட்டுக் கொன்ற நிகழ்வை ஒட்டி ஆங்கில அடிவருடிகள் சிலர், அச்செயலைக் கண்டித்து கடும் தண்டனை விதிக்கத் தீர்மானம் கொண்டுவந்தனர். அந்தக் கூட்டத்தில் நான் இத் தீர்மானத்தை எதிர்க்கிறேன் என்று துணிவோடு ஒற்றைக் குரல் எழுப்பியவர் சாவர்க்கர். அப்போது அவர் இருபத்தைந்து வயது இளைஞர். பாரத விடுதலைப் போராட்டத்தில் அசுர சாதனை நிகழ்த்தியவர்களெல்லாம் இளைஞர்களாகவே இருந்திருக்கிறார்கள். டோங்கரி சிறையிலிருந்த சாவர்க்கரைச் சந்திக்கவந்த பத்தொன்பது வயதேயான யமுனா பாய், அவரைச் சந்தித்துவிட்டுச் சொன்னது, தாங்கள் கவலைப்பட வேண்டாம். என் கணவர் தேச விடுதலைக்காக சிறையில் வாடுவது குறித்து நான் கவலைப்படவில்லை. அந்தமான் சிறை என்பது சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசபக்தர்களின் வேடந்தாங்கலாக விளங்கியது. பிரிட்டிஷ் சர்க்காரின் புண்ணியத்தால் சுதந்திரப் பறவைகள் அங்கு குடியேறின. வீரசாவர்க்கர் அந்தமான் சிறை 123ஆம் எண் கொட்டடியில் அடைக்கப்பட்டார். அங்கே எண்ணெய்ச் செக்கு இழுத்தாக வேண்டும். காய்ச்சல் வந்தால்கூட விடமாட்டார்களாம். 102 டிகரிக்குக் குறைந்தால் அந்தமான் சிறை அதிகாரிகள் அதைக் காய்ச்சல் என்று சொல்ல மாட்டார்களாம். ராம் ரக்கா என்ற ஒரு பிராமண இளைஞன் அணிந்திருந்த பூணூலை அகற்றும்படி சிறை அதிகாரிகள் சொன்னார்கள். அவன் மறுக்கவே, சிறை அதிகாரி அதை அறுத்து எறிந்தான். உண்ணாநோன்பிருந்து உயிர்விட்டான் ராம் ரக்கா. என்னுடைய தோளில் பவித்திரமான பூணூல் தொங்காதவரை நான் தண்ணீரும் பருக மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்து இரண்டே மாதங்களில் அவன் செத்துப்போனான். நோயினால் காலமானார் என்று அதிகாரிகள் சாதித்தும், விவகாரம் பத்திரிகைகள் மூலம் பற்றியெரிந்தது. சிறப்புக் கமிட்டி விசாரணை செய்து இந்துக் கைதிகள் பூணூல் அணியலாம். குடுமி வைத்துக்கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டதாம். பல சுவையான நெஞ்சை உலுக்கும் செய்திகளை ஷிவ்குமார் கோயல் என்பவர் ஹிந்தியில் எழுதி பி.ஆர்.ராஜாராம் அருமையாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். பெற்ற சுதந்திரத்தின் அருமை பெருமைகளை மறந்து அரசியலையும் ஒரு வணிகப் பொருளாக்கிவிட்ட காலகட்டத்தில் இந்த வரலாறுகளைப் படிக்கும் மனவளம் இருந்தால் தேசத்துக்கு விடிவு ஏற்படும் என் நம்பலாம். -சுப்ரபாலன். நன்றி: கல்கி, 14/12/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *