காகிதப் படகில் சாகசப் பயணம்
காகிதப் படகில் சாகசப் பயணம், பெ. கருணாகரன், குன்றம் பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 150ரூ.
விகடன், குமுதம், நக்கீரன், தினமணி, புதிய தலைமுறை என்று பல முன்னணிப் பத்திரிகைகளில் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய இந்நூலாசிரியர், கதை, கட்டுரை, பேட்டி என்று தனது படைப்புகளாலும், வசீகரமான எழுத்தாறறலாலும் வாசகர்களைக் கவர்ந்தவர். தனது 27 வருட பத்திரிகை துறையின் சுவாரஸ்யமான அனுபவங்களை இந்நூலில் கட்டுரை வடிவில் சுவைபட கூறியுள்ளார். ஒரு பத்திரிகையாளன் ஜொலிக்கும் வைரமாக வெளியுலகிற்குத் தெரிந்தாலும், அதற்காக அவன் பட்டை தீட்டப்படும்போது எத்தகைய இடர்களுக்கு ஆளாக்கப்படுகிறான் என்பதை, சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற கட்டுரை மூலம் படம் பிடித்துக்காட்டுகிறார். அதே போல் சினிமாவில் அப்போது பிஸியாக இருந்த நடிகை ரேவதியை, அந்த வார குமுதம் இதழுக்காகப் பேட்டி எடுக்க எல்லா ஏற்பாடுகளுடன் அவர் வீட்டிற்குச் சென்றால், அது நடிகை ரேகாவின் வீடு. ஏமாற்றம் அடைந்த இந்நிகழ்ச்சியை ஆளு மாறிப் போச்சு என்ற கட்டுரையில் படிக்க நகைச்சுவையாக உள்ளது. இப்படி கமல், ரஜினியுடனான அனுபவங்கள், பத்திரிகை அலுவலகத்திற்குள் நடக்கும் அரசியல், பருவ இதழ்களுக்கும், நாளிதழ்களுக்கும் உள்ள மாறுபட்ட எழுத்து நடை, பத்திரிகை துறையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொடுத்த சீனியர்கள், சினிமாத் துறை தந்த ஏமாற்றம், தன்னை நேசித்த சக நண்பர்கள், ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள், நிர்வாகிகள், சோதனை காலங்களிலும் துணை நின்ற குடும்பம்… என்று பல்வேறு அனுபவங்களையும் 38 கட்டுரைகளில் படிக்க விறுவிறுப்பாகவும் சுவையாகவும் எழுதி தொகுத்துள்ளார். -பரக்கத். நன்றி: துக்ளக், 17/12/2014.