இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம்
இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம், ஜஸ்டின் ஓ பிரையன், தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 632, விலை 300ரூ.
இமயமலை மீது நூலாசிரியர் ஜஸ்டின் ஓ பிரையன் பல முறை ஏறியிருக்கிறார். துறவிகள் அமர்ந்து தவம் செய்யும் புனிதமான இடங்களுக்கு நடந்தே சென்றிருக்கிறார். கும்பமேளாவில் தற்காலத் துறவிகளின் காலடியில் அமர்ந்து பாடம் கேட்டிருக்கிறார். அவருடைய ஆசான் சுவாமி ராமா பலமுறை அவரைப் புனிதப் பயணங்களுக்கு அனுப்பி ஆற்றலை அதிகரிக்க வைத்திருக்கிறார். அந்த ஆசான் மறைந்துவிட்டாலும் ஒளி வடிவில் இருந்துகொண்டு தகதியானவர்களின் மனங்களை ஒளிர்விக்கிறார். சேர்ந்து நடக்கிறார், உரையாடுகிறார், நான் உங்கள் உடமை என்று கூறுகிறார் இப்படிப்பட்ட அனுபவங்களுடன் கூடிய உத்தமமான சீடராக இருந்ததுடன், இமயத்து ஆசானின் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும் செய்திருக்கிறார் ஜஸ்டின் ஓ பிரையன். தன் ஆசான் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, ஆசானுடன் தனக்கு ஏற்பட்ட வாழ்க்கை அனுபவங்களை 25 ஆண்டுகாலம் ஆசானுடன் சேர்ந்து இருந்ததால் கிடைத்த அரிய புகைப்படங்களுடன், குறிப்புகளுடன் 28 தலைப்புகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். எதிர்காலம் குறித்த கனவுகளில் தொடங்கம் கல்லூரிப் பேராசிரியரான ஜஸ்டினின் வாழ்க்கைப் பயணம் அவருக்குத் தன் ஆசானை அடையாளம் காட்டுகிறது. மந்திரம், தியானம் பற்றிய புரிதல்கள் ஏற்பட்டு, ஆன்மிக வாழ்வில் முன்னேறிச் சென்று துறவியாக மாற்றி, சுயநிபுணத்துவம் பெற வைக்கிறது. பிறகு யோகிகளுடன் வாழ்தலும், துறவிகளுடன் பணியாற்றுதலும் வாய்க்கிறது. அதன் மூலமாக வாழ்வின் பிரதிபலிப்புகளாக அவருடன் ஆசான் சூக்கும வடிவில் இருக்கும் பேற்றைப் பெற்றுத் தருகிறது. ஒரு பயண அனுபவமாக இல்லாமல் சுவாரசியமான தத்துவார்த்தமாக ஒரு நாவலுக்குரியதாக, எந்தத் தொய்வும், நெருடலும் சலிப்பும் இல்லாமல் வாசிப்பைத் தொடரவைக்கிறது. நூலைப் படித்து முடித்த பிறகு ஒவ்வொருவருடைய மனத்திலும் இருக்கும் பல விதமான கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடுகிறது. தன் ஆசானை மட்டுமல்ல, இறைவனைக் கண்டடையக்கூடிய உபாயத்தையும் கூறுகிறது ஜஸ்டினின் பயண அனுபவங்கள். நன்றி: தினமணி, 15/12/2014.