ரகசிய ஆசைகள்

ரகசிய ஆசைகள், ப்ரீத்தி ஷெனாய், தமிழில் என்.டி. நந்தகோபால், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 304, விலை 200ரூ.

பெண் விடுதலையைப் பேசும் நாவல் இது. நாவலின் கதாநாயகி பள்ளிப்பருவத்தில் ஒருவனைக் காதலிக்கிறாள். அவர்கள் முத்தமிட்டுக் கொள்கின்றனர். நாயகியின் பெற்றோர் வெகுண்டு எழுந்து காதலரைப் பிரித்து, நாயகியை வேற்றூரில் படிக்க வைக்கின்றனர். 19 வயதிலேயே அவளுக்கு வலுக்கட்டாயமாக ஒரு திருமணமும் செய்கின்றனர். கட்டிய கணவன் மனதிற்கு இனியவனாக இல்லை. கணவனின் முட்டாள் தனங்களாலும், சுயநலமான நடத்தைகளாலும் கதாநாயகி மனம் சோர்ந்து போகிறாள். கடைசியில் தன் பள்ளிக் காதலனைச் சந்திக்கிறாள். அவன்பால் மறுபடியும் ஈர்க்கப்படுகிறாள். அப்புறம் என்ன ஆயிற்று என்பதுதான் கதை. ப்ரீத்தி ஷெனாய், நெஞ்சை நெருடும், ஒரு தர்மசங்கடமான விஷயத்தை, தன் உள்ளார்ந்த பார்வை மற்றும் புத்திக் கூர்மையுடன், அதிரடிபாணியில் ஓர் அற்புதமான கதையாகத் தருகிறார். நாவலை எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாது. கதாநாயகி தீக்ஷாவின் பாத்திரப் படைப்பு தனித்துவம் வாய்ந்தது. மொழிபெயர்ப்பாளர் நந்தகோபாலின் நடை, நம்மை உலுக்கி எடுக்கிறது. -எஸ்.குரு. நன்றி: தினமலர், 04/01/2015.  

—-

 

இந்த விநாடி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 150ரூ.

மூச்சுப் பயிற்சியின் வழியே நீங்கள் நினைப்பதை எல்லாம் சாதிக்க முடியும் என்கிறது நாகூர் ரூபிமியின் இந்த விநாடி நூல். தன்னம்பிக்கை, சுயமுன்னேற்ற புத்தகங்கள் தினம்தோறும் வெளிவருகின்றன. நூலாசிரியரின் தன்னம்பிக்கையூட்டும் முயற்சி வித்தியாசமானது. தன்னை அறிதலே தன்னம்பிக்கையின் அடிநாதம், தன்னை அறிய மூச்சுப் பயிற்சியே பிரதானம் என்று முழங்குகிறது இந்த விநாடி. மூச்சுப் பயிற்சி செய்யும் வழிகளை எளிதாக விளக்கி அதன் மூலம் முன்னேற்றம் எப்படி சாத்தியம் என்பதையும் பல்வேறு உதாரணங்களுடன் விவரிக்கிறார் நூல் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 24/12/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *