நான் மலாலா
நான் மலாலா (சுயசரிதை), ஆங்கிலம்-மலாலா, கிறிஸ்டினா லாம்ப், தமிழ்-பத்மஜா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், பக். 312, விலை 275ரூ.
இன்று உலகம் முழுதும் நேசிக்கப்படும் பெயர் மலாலா. அந்த பெயருக்குரிய 15 வயது சிறுமி, தன் வாழ்வில் அனுபவித்த துயரம் மிகக் கொடுமையானது. முஸ்லிம் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என, பிரசாரம் செய்த ஒரே காரணத்தால், 2012, அக்டோபரில், பள்ளியில் இருந்து மலாலா வீட்டிற்கு திரும்பியபோது, தலிபான்கள் அவரது தலையை குறிவைத்து சுட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி, இன்று நோபல் பரிசு பெற்று, அமைதியின் சின்னமாக உலகம் முழுவதும் அறியப்பட்டிருக்கிறார். இந்த நூல், அவரது சுயசரிதை. 15 வயதிலேயே எழுதப்பட்ட சுயசரிதை இதுவாகத்தான் இருக்க முடியும். ‘சண்டே டைம்ஸ்‘ பத்திரிகையில் பணியாற்றும் கிறிஸ்டினா லாம்ப், மலாலாவுடன் இணைந்து இந்த நூலை எழுதி உள்ளார். நன்றி: தினமலர், 17/1/2014.
—-
எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர், ஆங்கிலம்-ஜான் ஹோல்ட், தமிழில்-அப்பண்சாமி, இந்திய மாணவர் சங்கம் வெளியீடு, புக்ஸ் பார் சில்ரன்ஸ், பக். 272, விலை 170ரூ.
குழந்தைகள் எவ்வாறு கற்கின்றன என்பது குறித்து, பெற்றோர் படிக்க வேண்டிய புத்தகம். குழந்தைகளின் உலகம் புதிதானது. அவர்களின் உலகம் நம் உலகத்தை காட்டிலும் வேறானது. குழந்தைகள் கற்றல் குறித்து, விளையாட்டுகளும் சோதனை முயற்சிகளும், பேச்சு, வாசித்தல், ஓவியம், கணிதம் மற்றும் பிற, மூளையும் அதன் செயல்பாடுகளும், கற்றலும் அன்பும் என, பல்வேறு தலைப்புகளின் கீழ் குழந்தைகளின் கற்றல் திறனை, அதன் வழிமுறைகளை இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது. குழந்தைகளை அறிவுரீதியாக வளர்க்கும் முறையும் இதில் விளக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 17/1/2014.