இந்தியப் பண்பாட்டுத் தூதுவர்கள் தமிழ் நாட்டிய ஆசிரியர்கள்
இந்தியப் பண்பாட்டுத் தூதுவர்கள் தமிழ் நாட்டிய ஆசிரியர்கள், சண்முக செல்வகணபதி, அய்யா நிலையம், பக். 224, விலை 225ரூ.
தமிழ்ப் பண்பாடு சமயம் சார்ந்தே இருந்து வந்திருக்கிறது. நடனம் என்பது சமயஞ்சார்ந்த பண்பாட்டுக் கூறு. தமிழ்நாட்டில் நடனம் முதலில் கூத்து என்றும், பின்னர் சதிர் என்றும் அழைக்கப்பட்டு, தற்போது பரதநாட்டியம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பரதநாட்டியத்தை வழிவழியாகப் பயின்றும் பயிற்றுவித்தும் வந்திருக்கும் மரபினரில் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் நாட்டிய கலைக்கு ஆற்றியுள்ள பணிகள் பற்றியும், அவர்களுடைய நடனம் பயிற்றுவித்த ஆசிரியர்கள், அவர்களிடம் நடனம் பயின்ற மாணவர்கள் பற்றியும் விரிவாகவும், தெளிவாகவும் எழுதப்பட்டிருக்கும் நூல். நாட்டிய ஆசிரியர்கள் பலர், நடனம் கற்பிப்பதோடு நின்றுவிடாமல், நாட்டியத்துக்குத் தேவையான புதிய புதிய பாடல்கள், ஸ்வர ஜதிகள், வர்ணங்கள், பத வர்ணங்கள், ஜாவளிகள் போன்றவற்றை இயற்றியுமிருக்கிறார்கள். அவற்றைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருப்பதோடு, ஒரு சில பதவர்ணங்களும், பாடல்களும் முழுமையாகவும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நூலின் தொடக்கப் பகுதியில் கலை மேதை ஆனந்த குமாரசாமியின் வாழ்க்கைக் குறிப்புகள் இடம் பெற்றிருப்பதும், இறுதிப் பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட நாடக ஆசிரியர்களின் படங்கள் இடம் பெற்றிருப்பதும் சிறப்புக்குரியவை. தமிழறிஞர் தி.ந. இராமச்சந்திரன் எழுதியிருக்கும் அணிந்துரை ஓர் ஆய்வுரை. நன்றி: தினமணி, 8/12/2014.