சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை
சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, தொகுப்பாசிரியர் கமலாத்மானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 500, விலை 200ரூ.
இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட நாயகரான சுவாமி விவேகானந்தரின் தாக்கம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் பலரிடமும் இருந்தது. அவர்களுள் மகாகவி பாரதியார் முதன்மையானவர். விவேகானந்தரும் பாரதியாரும் நேரில் சந்தித்ததில்லை என்றபோதும், இவ்விருவரின் சிந்தனையும் கருத்துகளும் ஒத்திருப்பதைக் காண முடிகிறது. இருவரும் ஆன்மிக அடிப்படையில்தான் இந்தத் தேசம் உயர்வடையும் என்ற நம்பிக்கையை வலுவாக முன்வைத்தவர்கள். பாரதியாரின் கவிதைகள் பேசப்படும் அளவுக்கு அவரது இதழியல் பணிகள் பரவலாகத் தெரிய வராததால், பாரதியார் மீதான விவேகானந்தரின் தாக்கம் முழுமையாகப் பதிவாகவில்லை. இந்நிலையில் இவ்விரு மகான்களிடையிலான சிந்தனை உறவை ஆதாரப்பூர்வமான தனது தொகுப்பால் இந்நூலில் நிலைநாட்டி இருக்கிறார் சுவாமி கமலாத்மானந்தர். விவேகானந்தர் குறித்த பாரதியாரின் கட்டுரைகள், விவேகானந்தருடன் தொடர்புடையவர்கள் பற்றிய பாரதியாரின் கருத்துகள், பாரதியார் நடத்திய பத்திரிகைகளில் வெளியான ராமகிருஷ்ணர் இயக்கம் தொடர்பான செய்திகள் என பலவற்றையும் தொகுத்திருப்பது சிறப்பாகும். பாரதியாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பாலகங்காதர திலகர், மண்டயம் எஸ். ஸ்ரீநிவாச்சாரியார், பாரதியாரின் குடும்பத்தினர் உள்பட பலர் எழுதியுள்ள கட்டுரைகள், இவ்விர மகான்களிடையிலான கருத்திணக்கத்தை நன்கு வெளிப்படுத்துகின்றன. விவேகானந்தர் – பாரதி ஆய்வுக்கு இந்நூல் மிகப் பெரிய வரப்பிரசாதம். நன்றி: தினமணி, 16/2/2015.