அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள்
அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள், ஏ.பி.ஜெயச்சந்திரன், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, பக். 216, விலை 120ரூ.
ஸி.பி.ஐ. வழக்குகள், விஜிலன்ஸ் ஊழல் தடுப்பு வழக்குகள்… போன்ற பல கிரிமினல் வழக்குகளை ஏற்று நடத்திய இந்நூலாசிரியர், தமிழ்நாடு பிரஸ் கிளப் மற்றும் பிரபல நாளிதழ்களுக்கு சட்ட ஆலோசகராகவும் இருந்து வருகிறார். இவர், அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள் குறித்த விவரங்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், முன்பு தினத்தந்தி ஞாயிறு மலரில் ‘சட்டம் தெரிந்துகொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். அது வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அவை தொகுக்கப்பட்டு நூலாக வெளியாகியுள்ளது. அதன்படி இந்நூலின் முதல் கட்டுரையில் ‘முதல் தகவல் அறிக்கை பற்றிய சட்டம்’ குறித்து விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில், கைது செய்வதற்குரிய குற்றங்களுக்கு மட்டும்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்; இந்தப் புகாரை யார் வேண்டுமானாலும் தரலாம்; புகாரை எழுத்து மூலமாகவோ, வாய்மொழி மூலமாகவோ தரலாம்; புகாரை பதிவு செய்வதும், அதற்கான நகலைப் பெறுவதும் இலவசமே; புகாரை போலீஸார் ஏற்க மறுத்தால் அடுத்தகட்ட நடிவடிக்கை என்ன; பொய்யான புகாராக இருந்தால் புகார் அளித்தவருக்கான தண்டனை என்ன; புகாரை தாமதமாக பதிவு செய்யக்கூடாது… என்று பல விபரங்கள் விளக்கப்பட்டுள்ளன. இது போன்று புலன் விசாரணை பற்றிய சட்டம், மரண வாக்குமூலம், சாட்சிகள், மதம் சம்பந்தமான குற்றங்கள், அரசுக்கு எதிரான குற்றங்கள்; பாலியல் குற்றங்கள்.. என்று 82 வகையான குற்றங்களுக்கு உரிய சட்டங்கள் இந்நூலில் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன. -பரக்கத். நன்றி: துக்ளக், 25/3/2015.