வெள்ளி இரவொன்றில்
வெள்ளி இரவொன்றில், செல்மா மீரா, தமிழ் அலை, சென்னை, பக். 96, விலை 80ரூ.
கவிஞர் மீராவின் மகள் செல்மா மீரா. தந்தையைப் போலவே தன்னை ஒரு கவிஞராக அடையாளப்படுத்தி வெளியிட்டிருக்கும் இரண்டாம் தொகுப்பு இந்நூல். பெரும்பாலும் காதலின் சாரத்தையே கவிதைகளாக்கி பூக்க வைத்திருக்கிறார். ‘நீ என் நிழலாக இருந்தால் இந்த பூமியின் பாரங்களை எளிதாக நான் சுமப்பேன்’ – காதலின் உன்னதமே இதுதான். மௌனத்திற்கும் ஒரு சப்தம் தருகிறார். காற்றின் கரங்களால் நம்மை தீண்டிப்பார்க்க வைக்கிறார். பல நூறு பௌர்ணமிகளை ஒன்று சேர்த்து வெள்ளி இரவைப் படைத்துக் காட்டி, அதன் வெளிச்சத்தில், நம்மை கனவு காண வைக்கிறார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 23/3/2015.
—-
மீண்டும் ஒரு மழைக்காலத்தில், கவிஞர் தியாகு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, பக். 208, விலை 210ரூ.
21 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நூல். சமூகம் பயன்பெற வேண்டி, சிறுகதைகள் படைப்போர் அருகிவரும் இந்த தருணத்தில், மனிதநேயத்துடனும் சமூகத்தின் மேன்மை கருதியும் படைக்கப்பட்ட கதைகளாக இவை விளங்குகின்றன. வேலை பார்க்கச் செல்லும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய அவலம், காதலை வேறொரு கண்ணோட்டத்தில் பார்ப்பது, வீட்டு வேலைக்குச் செல்லும் ஏழைப் பெண்கள் படும் துயரங்கள், பாலியல் தொந்தரவுகள், குடும்ப உறவுகளின் மேன்மை, சித்தாள வேலைக்குச் செல்வோர் படும் அவஸ்தைகள் என்று எல்லா மட்டங்களிலும், அச்சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை ஒரு சமூகப் போராளியாக இருந்து களைந்தெடுக்க முயலும் இச்சிறுகதைகள். சிறுகதை வளர்ச்சிக்கு உதவும் நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 23/3/2015.