நோக்கு நூல்கள் மரபும் புதுமையும்
நோக்கு நூல்கள் மரபும் புதுமையும், இரா. பன்னிருகை வடிவேலன், தமிழாய்வு மன்றம், பக். 104, விலை 100ரூ.
பழந்தமிழ் இலக்கிய, இலக்கண, நிகண்டு நூல்கள், அவை தொடர்பான ஆய்வுகள் போன்றவை தற்போது பெருமளவில் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. இது தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு உதவுகிறதோ இல்லையோ, பழந்தமிழ் நூல்கள் அழிந்துவிடாமல் அவற்றைப் புதுப்பொலிவுடன் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லவும் உதவுகின்றன என்பது முற்றிலும் உண்மை. அந்த வரிசையில் பலரும் அறியாத ஐந்திணை மஞ்சிகன் சிறு நிகண்டு, நிரரர் நிகண்டு, சிந்தாமணி நிகண்டு ஆகிய நிகண்டு நூல்கள் விரிவான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்நிகண்டு நூல்களுள் சிற்சில மாற்றங்கள் இருப்பதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். சொற்பொருளை விளக்குபவை நிகண்டுகள். இவை பலபொருள் குறித்த ஒரு சொல் எனவும் ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள் எனவும் இருவகைப்படும். இத்தகைய நிகண்டுகளை முதன் முதலில் தமிழுக்கு வழங்கியவர்கள் சமணர்கள். நிகண்டு நூல்கள் தவிர, கணினி வழி நூலடைவு உருவாக்குவது எப்படி? என்பது பற்றிய விரிவான விளக்கமும் இடம்பெற்றுள்ளது. நூலடைவைப் பற்றிய விளக்கம், நூலடைவின் வகைகள், அவற்றை உருவாக்கும்போது ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றைக் கூறி, அச்சிக்கல்களைக் களைவதற்கு எளிதாகவும் விரைவாகவும் பிழையில்லாமலும் நூலடைவு உருவாக்கும் புதுமை நெறியைப் புகுத்தி, வரைபடங்களோடு வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். அரிய பல தகவல்களை உள்ளடக்கியுள்ள இக்கணினி வழி நூலடைவு இந்நூலுக்கு சிறப்பு சேர்த்துள்ளது. நன்றி: தினமணி, 16/2/2015.