திருக்குறள் பன்முக உரை
திருக்குறள் பன்முக உரை, சா. டேவிட் பிரதாப்சிங், திருவரசு புத்தக நிலையம், சென்னை, விலை 300ரூ.
உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு உள்பொருளைத் தேடும் பணி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆளுக்கு ஓர் உரை, நாளுக்கு ஓர் உரை என்று விரிவடைந்து செல்கிறது. அந்த வகையில் ஆங்கிலப் பேராசிரியர் சா. டேவிட் பிரதாப்சிங், திருக்குறளுக்கு எழுதியுள்ள இந்த பன்முக உரை தமிழர்கள் இன்முகங்காட்டி வரவேற்கத்தக்க இனிய உரை. ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு, பொழிப்புரை, பதவுரை, அதோடு கவிதை நடையில் ஒரு வரி உரை. பின்னிணைப்பில் திருக்குறளோடு தொடர்புடைய பிற இலக்கியக் கருத்துக்கள், திருக்குறள் அணி நயம், குறள் ஈற்றுச் சீர் அட்டவணை, செய்யுள் முதற்குறிப்பு ஆகியவை நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. நன்றி: தினத்தந்தி, 29/4/2015.
—-
பல்லவன் பாவை, கருப்பூர் மு. அண்ணாமலை, பொன்மணி புத்தகநிலையம், சென்னை, விலை 150ரூ.
சோழர் ஆட்சியைத் தஞ்சையில் நிறுவுவதற்கு பாடுபட்ட விஜயாலய சோழனை கதாநாயகனாகக் கொண்டு புனையப்பட்ட சரித்திர நாவல். எளிய நடையில் சுவாரஸ்யமான நாவலில் படைத்திருக்கிறார் கருப்பூர் மு. அண்ணாமலை. நன்றி: தினத்தந்தி, 29/4/2015.