மன்மதக் கொலைகள்
மன்மதக் கொலைகள், தெக்கூர் அனிதா, குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, சென்னை, பக். 144, விலை 99ரூ.
துப்பறியும் நாவல்களைப் படிப்பதற்கு என்றே ஒரு வாசகர் வட்டம் உள்ளது. கதையில் வரும் சம்பவங்கள், அதில் இடம் பெறும் மாந்தர்கள், திருப்புமுனைகள், கிளைமாக்ஸ் அத்தனையும் அன்றாட வாழ்வில் நடந்தவை போலவே தோன்றுவதால் கூடுதல் ஈர்ப்பு எழுகிறது. படிப்போர் ஒன்று நினைக்க அதன் திருப்புமுனைகளும் கிளைமாக்ஸும் அமைந்துள்ளன. மூன்று கொலைகளைச் செய்துவிட்டு தப்பிக்க முயலும் தயாளனை, காவல்துறையினர் பொறிவைத்துப் பிடிக்கும் ஒவ்வொரு கட்டமும் ஒரு திருப்புமுனைதான். 2007ல் சென்னையில் கள்ளக்காதலால் நடந்த கொலையையும் தற்கொலையையும் அடிப்படையாக வைத்து நாவல் பின்னப்பட்டிருந்தாலும் இன்றைக்கு நடக்கும் கள்ளக்காதல் கொலைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே உள்ளது. படிக்க விறுவிறுப்பான நாவல். நன்றி: குமுதம், 25/5/2015.
—-
மழையைப்போலத்தான் நீயும், ஆர். சத்தியன், சித்ரகலா பதிப்பகம், பக். 80, விலை 80ரூ.
கவிதைகளின் அமைதியில் மழைவிழும் சத்தத்தை நமக்கு கேட்கச் செய்திருக்கிறார் கவிஞர். கவிதைகளுக்கு கருபபொருளாக ஈரக்காற்றும், பனிப்பொழிவும், மழைச்சாரல்களும், மயிலிறகும், ரேகா டீச்சரும், அடுத்த வீட்டு அக்காவும் வந்து தன்னை கவிதைகளாக்கு என்று கவிஞரைக் கேட்பது, படிக்கும் நமக்குக் கேட்கிறது. பாம்பின் உறக்கத்தைக் கெடுத்த தவளை போலாகிவிடும் சில நேரம் நம் வாழ்க்கையும் என்பன போன்ற உவமைகளில் கவிஞரின் வாழ்வியல் அனுபவங்கள் பட்டென மழைத்துளிகளாய் நம் மனதில் பட்டுத் தெளிக்கின்றன. மொத்தத்தில் மழையைப் பிடிக்கும் யாவர்க்கும் இக்கவிதைகள் பிடிக்கும். நன்றி: குமுதம், 25/5/2015.