ஃபேஸ்புக் பக்கங்கள்
ஃபேஸ்புக் பக்கங்கள் (தொகுதி 1), தொகுப்பு சுப்ரஜா, கலைஞன் பதிப்பகம், பக். 416, விலை 312ரூ.
முக நூலில் இருப்பவர்களுக்குத்தான் அந்த சுதந்திர தாகம் புரியும். இது வெட்டி வேலை என்று ஸ்டேட்டஸ் போடுவதில்கூட ஒரு கருத்து இருக்கும். அல்லது உண்மை இருக்கும். நிறையப் பேர் துணிச்சல் மிக்கவர்களானதே ஃபேஸ்புக் வருகைக்குப் பிறகுதான். பிரபலமாக இருந்தால்தான் எழுத முடியும் என்ற பெர்லின் கோட்டையை உடைத்தெறிந்தது ஃபேஸ்புக்தான். கவிதை, சிறுகதை, நாவல், அரசியல், நாடகம், பாட்டு, காமெடி, விமர்சனங்கள், சர்ச்சைகள், சண்டைகள், சமையல்கள், சோதிடம், பக்தி என்று எதை வேண்டுமோ அது உங்களுக்குக் கிடைக்கும் தளமாக அது உருமாறி வந்துவிட்டது. அப்படி ஃபேஸ்புக்கில் சிந்தித்தவர்களை, சிதறிக் கிடந்தவர்களை ஒன்ற சேர்த்திருக்கிறார் எழுத்தாளர் சுப்ரஜா. கவனிக்கப்படாமல் போகும் பல நல்ல விஷயங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்று தொகுப்பாசிரியரின் முயற்சி வரவேற்கத்தக்கதே. முகநூலில் உள்ளவர்களின் ஒப்புதலுடன், தொகுத்திருப்பதால் உழைப்பும், உண்மைத்தன்மையும் நூலில் தெரிகிறது. இது ஒரு முதல் முயற்சி என்பதால் கூடுதல் கவனம் பெறுகிறது. நன்றி: குமுதம், 25/5/2015.
—-
கண்ணாடி நகரம், ஜெயதேவன், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பக். 96, விலை 70ரூ.
கவிதை வடிவில் வந்திருக்கும் சமூகம் சார்ந்த கூர்மையான விமர்சனங்கள் இவை. அமெரிக்க வல்லாதிக்க எதிர்ப்புணர்வு, சுற்றுச்சூழலின்மை, தமிழின் நிலை, நடுத்தரமக்களின் கைத்தொழில்கள் நசிவு, நீராதாரங்கள், வயல்களின் அழிவு என்று கவிஞர் வாழ்வின் இழப்புகளை நம்முன் வைக்கிறார். அந்நிய மரபணு விதைகள் வீரிய பயிர்முறைகளாய் இந்த சமூகத்தின் ஏமாற்றங்களை விவரிக்கிறார். குயில்களைத் தின்றுவிட்ட காளான்களாம் செல்போன்கள் என்ற கவிதை தகவல் நுட்பத்தில் மனிதன் மானுடத்தை இழந்து நிற்கும் அவலத்தைச் சாடும் ஒரு இடம்போதும், கவிஞரின் சமூக அக்கறைக்கு. கவிதைகளுக்கு இடையே ஊடுபயிராய் யவனிகா ஸ்ரீராம், தேவேந்திர பூபதி, சக்தி ஜோதி ஆகியோரின் விமர்சனங்களையும் தந்திருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 18/5/2015.