பாரம்பரிய மருத்துவம்
பாரம்பரிய மருத்துவம், டாக்டர் சக்தி சுப்பிரமணி, ஸ்ரீ லக்ஷ்மி பதிப்பகம், விலை 325ரூ.
ஆயுர்வேதம், சித்தா, ஜோதிடம் ஆகியவற்றில் பட்டம் பெற்றுள்ள இந்நூலாசிரியர், பாரம்பரிய மருத்துவம் என்ற தலைப்பில் நமது முன்னோர் எழுதியுள்ள தமில் நூல்களிலுள்ள மருத்துவக் குறிப்புகளை ஆய்வு செய்து M.Phil பட்டமும் பெற்று, சிறந்த சித்த மருத்துவராகவும் திகழ்கிறார். இவர் தனது மருத்துவ ஆய்வு மற்றும் அனுபவத்தின் பலனை பொதுமக்களும் அறிந்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், தினமும் தொலைக்காட்சி வாயிலாகவும் அவற்றை எடுத்துரைத்து வருகிறார். அவற்றிற்கு நல்ல வரவேற்பு உள்ளதால், அவை புத்தகங்களாக வெளியாகியுள்ளன. இவை மூன்று பகுதிகளைக் கொண்ட தனித்தனி நூல்கள். ஒவ்வொன்றும் சராசரியாக 200 பக்கங்களுக்கு மேல் விரிகின்றன. முதல் பகுதியில் ஒவ்வொரு நோயின் காரண காரியங்களை விளக்கி, அதற்கான மருத்துவக் குறிப்புகளையும், பயன்படுத்தும் முறைகளையும் கூறியுள்ளார். இதில் ஏறக்குறைய எல்லா நோய்களுக்குமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவக் குறிப்புகள் உள்ளன. இவை எல்லாமே எளிதில் கிடைக்கக்கூடிய மருந்துப் பொருட்களே. இரண்டாவது பகுதியில் நம் உடலுக்கு, மனதுக்கு வரும் நோய்கள் குறித்தும், அவற்றில் எவை மனிதனாலும், எவை இறைவனாலும் தீர்க்கப்படக் கூடியவை என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளன. மூன்றாவது தொகுதியில் மூலிகைகளை மையமாகக் கொண்டு, அவற்றின் பெயர்கள், மருத்துவக் குணங்கள், அவற்றை எந்த நோய்க்கு எப்படிப் பயன்படுத்துவது என்பன போன்ற பல விபரங்கள் விளக்கப்பட்டுள்ளதோடு, அம்மூலிகைகளின் வண்ணப் புகைப்படங்களும்இடம் பெற்றுள்ளது சிறப்பானது. -பரக்கத். நன்றி: துக்ளக், 3/6/2015.