நான் மலாலா
நான் மலாலா, மலாலா யூசுஃப்ஸை, இணைந்து எழுதியவர் கிறிஸ்டினா லாம்ப், தமிழில் பத்மஜா நாராயணன், காலச்சுவடு வெளியீடு, விலை 275ரூ.
புலியாக மாறிய ஒரு பூனையின் கதை To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023852.html வெளிநாட்டில் வேலை செய்பவரின் மனைவி ஒருத்தி, மிகவும் தாராளமாகத் தன் நகைகள் அனைத்தையும் தாலிபான்களுக்கு நன்கொடையாக அளித்துவிட்டாள். கணவன் திரும்பி வந்து நடந்ததை அறிந்ததும் சொல்லொணாக் கோபம் அவனுக்கு. ஒரு நாள் கிராமத்தில் குண்டுவீச்சு நடந்திருக்கிறது. அந்த ஓசை கேட்டு அந்தப் பெண் அழத் தொடங்கியிருக்கிறாள். கணவன் சொன்னானாம், “அழாதே! இந்த ஓசை உன்னுடைய தோடு மற்றும் மூக்குத்தியுடையது. இன்னும் உன் வளையல்கள், பதக்கங்களிள் ஒலியைக் கேட்க வேண்டாமா?”. தாலிபான்களை உண்மையான இஸ்லாத்தின் நெறி காக்க வந்தவர்கள் என்று பலர் எண்ணி மோசம்போன கதையை இப்படி எழுதுகிறார் மலாலா. பெண்கள் பள்ளிக்குச் செல்வதையும் கல்வி கற்பதையும் அனுமதிக்காத தாலிபான்களை எதிர்த்துப் பள்ளிச் சிறுமியாக இருந்தபோதே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மற்ற வகைகளிலும் குரல் கொடுத்துப் போராடியவர் மலாலா யூசுஃப்ஸை என்கிற மலாலா. ஆம். ஒரு நாள் பள்ளியிலிருந்து சக மாணவியருடன் பள்ளி வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மலாலா தாலிபான் தீவிரவாதிகளால் பின் மண்டையில் மும்முறை சுடப்பட்டாள். உடனே அவளை லண்டனுக்குக் கொண்டு போய் பிரமிக்கத்தக்க அளவில் சர்ஜரிகள் செய்து குணப்படுத்தினார்கள். மருத்துவமனையிலிருந்த மலாலாவைப் போய்ப் பார்த்தவர்களுள் முக்கியமானவர் பாக். அதிபரான ஆசிப் அலி சர்தாரி. மருத்துவமனையில் சிக்சிச்சை பெற்று வந்த மலாலாவுக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் ஒரு கடிதம் தலையில் குண்டடிபட்ட பெண், பிர்மிங்ஹாம் என்பதாக முகவரியிடப்பட்டிருந்ததாம். இந்த மலாலா பிறந்த பூமியிலும் பெண் குந்தைகள் பிறப்பதைப் பாவமாகவே கருதியிருக்கிறார்கள். அங்கே ஆண் குழந்தை பிறந்தால் துப்பாக்கியால் மேல்நோக்கிச் சுட்டுக் கொண்டாடுவார்களாம்… பெண் குழந்தையானால் திரைக்குப்பின்னே ஒளித்து வைப்பார்களாம். எல்லாக் குழந்தைகளையும் போலவே மலாலாவுக்கும் காலையில் சீக்கிரம் கண்விழிக்கப் பிடிக்காதாம். படுக்கையில் சுருண்டு படுத்திருக்கும் மலாலாவை அவளுடைய தாயார் செல்லமாகப் பிஷோ என்று அழைத்து எழுப்புவாராம். பிஷோ என்றால் பூனை என்று பொருள். இந்தப் பூனைக் குட்டியைப் புலியாக்கியது தாலிபான்களின் அட்டூழியங்கள்தான். குண்டடிபட்ட ஓராண்டுக்குள் முழுமையாகச் சிகிச்சையில் தேறி உலகே வியக்கும் வண்ணம் ஐ.நா. சபையில் உரையாற்றும் வாய்ப்பும் கிடைத்தது மலாலாவுக்கு. எல்லாக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி வேண்டும் என்பதே அந்த உரையின் கருத்து. ஒரு சின்னஞ்சிறு பெண் இவ்வளவெல்லாம் தீர்க்கமான சிந்தனையோடு பேசுவது சாத்தியம்தானா என்கிற ஐயம் ஏற்படுவது இயல்பே. ஆனால் ஆஸ்லோவில் சென்ற டிசம்பரில் நோபல் பரிசு பெற்றபொது வெகு சரளமாக அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய ஏற்புரையைக் கேட்டு பிரமிப்பில் ஆழ்ந்தது நிஜம். அந்த அழகான உரையின் தமிழாக்கமும் நூலின் இறுதிப் பகுதியில் இடம் பெற்றிருக்கிறது. சண்டே டைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றுகிற கிறிஸ்டினா லாம்ப் உதவியோடு எழுதப்பட்ட இந்த மலாலாவின் சுயசரிதை ஐ யாம் மலாலா ஒரு புனைகதையை விடவும் படுசுவாரசியமாக இருக்கிறது. பத்மஜா நாராயணனின் இயல்பான தமிழாக்கத்தில் இப்போது வெளியாகியிருக்கிறது. மூலநூல் என்றே சொல்லத்தக்க மொழியாக்கம். பாராட்ட வேண்டும். -சுப்ர. பாலன், நன்றி: கல்கி, 29/6/2015.