குலோத்துங்கன் – எ பொயட் ஆப் தி நாலெட்ஜ் ஈரா
குலோத்துங்கன் – எ பொயட் ஆப் தி நாலெட்ஜ் ஈரா, கே. செல்லப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 156, விலை 250ரூ.
அறிவுலக சகாப்தத்தில் உலக அரங்கில் உலவும் ஒரு கவி குழந்தைசாமி என்ற தமிழரின், உணர்ச்சிகளின் வடிகாலே, குலோத்துங்கன் என்ற கவிஞர் (பக். 6) என்ற சிவத்தம்பியின் இந்த கருத்தை முன்னிறுத்தி, டி.எஸ்.எலியட், ஜே.சி. ரான்சம் ஆகியோரை பின்பற்றி (பக். 7) மனிதவர்க்கம் மேம்பட, அறிவியல், கலை, பண்பாடு ஆகியவை இணைந்து இழையோடும் குலோத்துங்கன் படைத்துள்ள, மானுட யாத்திரை எனும் காவியம் உட்பட, 10 நூல்களை ஆய்வு செய்து, ஒன்பது கட்டுரைகள் மூலம், உன்னத படைப்புகளை எடுத்துக்காட்டியுள்ளார், ஆங்கில இலக்கிய மேதை கே. செல்லப்பன். கவிஞர் குலோத்துங்கன், சங்க இலக்கியங்கள் துவங்கி, வள்ளுவர், கம்பன், பாரதி, பாரதிதாசன் என தற்கால கவிஞர்கள் வரை தோய்ந்து, அறிவியல் துறை போன்றே கவிதையிலும் ஆழங்கால் பதித்தவர். அவர் அறிவுலக சகாப்தத்தில், உலக அரங்கில் உலவும் ஒரு கவி என்பதை, இந்த கட்டுரைகள் மூலம் நிலை நாட்டியுள்ளார் செல்லப்பன். முன்னாள் துணைவேந்தர், பி.கே. பொன்னுசாமியின் அணிந்துரை வாசகனுக்கு ஓர் ஈர்ப்பை அளிக்கிறது. குலோத்துங்கனும் தமிழ்க் கவிதை மரபும் எனும் கட்டுரையில், கடந்த காலத்தை நிகழ்காலத்தால் மாற்றியமைக்க வேண்டும். ஆயினும் நிகழ்காலம் கடந்த காலத்தால் வழிநடத்தப்பட வேண்டும் (பக். 19) என்ற கவிஞரின் கருத்துக்குரிய கவிதை இடம் பெற்றுள்ளது. அறிவியல் அமைப்பும் (சயின்டிபிக் ஸ்ட்ரக்ச்சர்) கவித்துவ இழையும் (பொயட்டிக் டெக்ஸச்சர்) ஆக இருவேறு தத்துவங்களை பாடும் ஆற்றல்மிக்க கவிஞரின் பாடல் ஒன்றில், காலங்கள் மூலங்கள், பாலங்கள், கோலங்கள் என அணி அழகும் (பக். 32), வாமனம் தோற்றதம்மா என்ற கவிதை மூலம் இன்டர்நெட் (பக். 45) அறிவியலின் விசுவரூபமும், நயமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. குடிசைக் குவியல் (பக். 49) கட்டுரையில், சமூக அவலம் அகல, அறிவியல் தந்துள்ள கொடைகள் அனைத்தையும், நாம் பெற வேண்டும் என அறிவுறுத்துகிறார். ஆங்காங்கே மில்டன், ஷேக்ஸ்பியர், கம்பன், பாரதி இப்படி பலரது ஒத்த கருத்துக்களும் பதிவாகியுள்ளன. அறிவியல் வானத்தைத் தழுவிய போதிலும் கவிதையின் தேவை வேர்களே (பக். 69) என்னும் நூலாசிரியர், ராவணன் போர்க்களத்தில் ஒன்றன்பின் ஒன்றாய் இழந்த அவலத்தை, இன்றைய ஈழத்தமிழனின் துயருடன் (பக். 67) ஒப்பிட்டு பாடியதை நெகிழ்வுடன் நினைவு கூர்ந்துள்ளார். ஷெல்லியின் க்யூன் மாப் மூலம், (பக். 77) பெண்ணின் சம உரிமைக்குரல் கொடுக்கும் பாங்கு சிறப்பாயுள்ளது. மனித மேம்பாட்டை சமூகம், அறிவியல், ஆன்மிகம் என்ற மூன்று நிலைகளில்(100) பகுத்து, வேதாந்த, சித்தாந்த விளக்கங்கள் தந்துள்ளது, கவிஞரின் ஆழ்ந்த புலமைக்கும் அறிவாற்றலுக்கும் எடுத்துக்காட்டு, இம்மானுட யாத்திரை காவியம். மரபுப்பாவலர் குலோத்துங்கனை, அறிவுலக சகாப்தத்தில் உலக அரங்கில் வலம் வரும் ஒரு கவி எனப் புகழாரம் சூட்டியுள்ளது சாலச்சிறப்பு. – பின்னலூரான். நன்றி: தினமலர், 31/5/2015.