அரங்கமா நகருளானே!

அரங்கமா நகருளானே!, வேதா டி. ஸ்ரீதரன், வேத ப்ரகாசனம் வெளியீடு, சென்னை, பக். 270, விலை 250ரூ.

பூலோக வைகுந்தம் என்று வைஷ்ணவர்களால் போற்றிப் புகழப்படும் ஸ்ரீ ரங்கத்து திருக்கோவிலின் தல வரலாறு மற்றும் ஆலயம் குறித்த பல அரிய தகவல்களை தொகுத்து எளிய தமிழில் இந்நூலை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். பன்னிரு ஆழ்வார்களில் பதினோரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒரே பெருமாளாகிய அரங்கநாதர் வீற்றிருக்கும் இத்திருத்தலத்தையும், அவரின் அருமை பெருமைகளையும் பற்றி 22 தலைப்புகளில் விரியும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் பகத்ர்களுக்கு பரவசமூட்டும் வகையில் அமைந்துள்ளது. உங்களுக்குத் தெரியுமா? என்று ஒவ்வொரு கட்டுரைக்கு இடையேயும் பெருமாளை, ஆலயத்தை, ஆழ்வார்களை, அடியார்களுக்கு நிகழ்ந்த அதிசயங்களைப் பற்றிய பல அரிய செய்திகளை பெட்டிச் செய்திகளாகவும், வண்ணப் புகைப்படங்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளது படிக்க விறுவிறுப்பாக உள்ளன. யுக புருஷர் என்ற கட்டுரை ஸ்ரீராமானுஜரைப் பற்றியும், ஸ்ரீ வைஷ்ணவத்தில் அவர் நிகழ்த்திய சீர்திருத்தங்களைப் பற்றியும் விவரிக்கிறது. அரங்கனின் அக்ஞாத வாசம் என்ற கட்டுரை உலுக்கானின் படையெடுப்பால் ஆலயத்திற்கு நேர்ந்த பாதிப்பு, பெருமாள் பாதுகாக்கப்பட்ட நிகழ்வுகள், 12 ஆயிரம் அடியார்கள் படுகொலையான சம்பவம், தேவதாசி ஒருவர் புரிந்த மகத்தான தியாகம்… என்று பல செய்திகளை விவரிக்கிறது. ஸ்ரீரங்கம் to மாஸ்கோ என்ற கட்டுரையில் பெருமாளிக் கண்களில் இருந்த இரண்டு விலை மதிப்பற்ற வைரங்கள் திருடு போன கதை விளக்கப்பட்டுள்ளது. இப்படி பல செய்திகள் மத ரீதியாக மட்டுமின்றி வரலாறு, இலக்கியம், சமூகவியல், அறிவியல் என்று பல வகையிலும் அலசி ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது இந்நூல். -பரக்கத். நன்றி: துக்ளக், 19/8/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *