சாதகலங்காரத்தில் சித்தர் கருத்துகள்
சாதகலங்காரத்தில் சித்தர் கருத்துகள், ஜோதிடர் தி. கல்பனா தேவி, ராசகுணா பதிப்பகம், பக். 160, விலை 130ரூ.
ஜோதிட சாஸ்திர தொடர்புடைய நமக்குக் கிடைத்திருக்கும் நூல்களில் மிகப் பழமை வாய்ந்ததும், தலைசிறந்ததுமான நூல் சாதகலங்காரம். வடமொழியில் அமைந்துள்ள இந்த மூலநூல், தமிழில் கீரனூர் நடராஜன் எனும் புலவரலால், கி.பி. 1587ல் எழுதப்பட்டது. அகத்தியர், புலிப்பாணி, போகர், மச்சமுனி போன்ற சித்தர்களும் ஜோதிட நூல்களை இயற்றியிருக்கின்றனர். சித்த மருத்துவம், ஜோதிடம், யோகம், ஞானம், ரசவாதம் போன்றவை, ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. சித்தர்கள் சமயம், மருத்துவம், ஜோதிடம் ஆகியவை பற்றி ஏராளமான கருத்துக்களைப் பதிவு செய்திருக்கின்றனர். இந்த நூலில் சாதக அலங்காரத்தில் உள்ள குறிப்புகளுக்கு, சித்தர்களின் கருத்துகள் எப்படி விரிவான விளக்கம் தரும் முறையில் அமைந்துள்ளன என்பதை நூலாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். உயிர்களின் தோற்றம், மந்திரம், விதி, அட்டமாசித்தி, தீட்சை, மருத்துவச் செய்தி, காயகற்பம், நவரத்தினம் போன்றவை பற்றிய விளக்கங்களையும் தொகுத்திருப்பது, நூலுக்குக் கூடுதல் சிறப்பு. -சிவா. நன்றி: தினமலர், 23/8/2015.