புனிதராற்றுப்படை

புனிதராற்றுப்படை, எம். அல்போன்ஸ், பொதிகை பதிப்பகம், சென்னை, பக். 104, விலை 80ரூ.

சங்ககால ஆற்றுப்படை இலக்கியங்கள் அனைத்தும் இலக்கியக் கருவூலங்களாகும். சங்ககத் தொகை நூல்களுள் ஒன்று பத்துப்பாட்டு. இப்பத்துப்பாட்டில்தான் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை முதலிய ஆற்றுப்படை நூல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வரிசையில் தற்போது வெளிவந்திருக்கும் இந்தப் புனிதராற்றுப் படையையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆற்றுப்படுத்துதல் என்றால், வழிப்படுத்துதல் என்றும், ஆற்றுப்படை என்றால் வழிப்படுத்தி அனுப்புதல் என்றும் பொருள். விறலியர், பாணர், கூத்தர், பொருநர் போன்றோர் தம் வறுமையைப் போக்கிக் கொள்ள வள்ளல்களிடம் சென்று, பொன்னும் பொருளும் பெற்றுத் திரும்பிச் செல்லும் வழியில் எதிர்ப்படும் – பரிசு பெறச் செல்லும் ஒருவரை வழிப்படுத்தி அனுப்புவதே ஆற்றுப்படையாகும். ஆற்றுப்படுத்திப் பாடப்படும் பாடல்கள் தமக்குப் பொருள் தந்த மன்னன், தலைவனின் புகழ், கொடை, வீரம் போன்றவற்றைப் பற்றி எடுத்துக் கூறுவதாக அமையும். அதே ஆற்றுப்படை இலக்கணத்தோடு இயற்றப்பட்டுள்ளதுதான் இந்நூல். திருநெல்வேலி மாவட்டத்தில் பொதிகைமலைக்கு மிக அருகில் அமைந்த ஊர் சுரண்டை. இவ்வூரைச் சுரண்டையூர் எனத் திரிகூட ராசப்பக் கவிராயர், தம் குற்றாலக் குறவஞ்சியில்  குறிப்பிட்டிருக்கிறார். இவ்வூரிலுள்ள புனி அந்தோனியார்தான் பாட்டுடைத் தலைவர். புனித அந்தோனியார் யார்? அவர் செய்த பணிகள் எவை? புனித அந்தோனியாருக்கு எந்தெந்த ஊர்களில் ஆலயங்கள் உள்ளன? அவரது வாழ்க்கை வரலாறு, புதுமைகள், அற்புதங்கள், சுரண்டையின் சிறப்பு, கிறிஸ்தவத்தின் மறைக்கல்வி, அருட்சாதனங்கள், சுரண்டை நகரின் எழில் முதலியனவற்றை கவிநயத்தோடு வடித்து, தான் பிறந்த ஊருக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் நூலாசிரியர். நன்றி: தினமணி, 20/7/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *