இந்தியத் தேர்தல் வரலாறு
இந்தியத் தேர்தல் வரலாறு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த் சென்ஸ், பக். 608, விலை 650ரூ.
இந்திராவை வாஜ்பாய் ஆதரித்தது ஏன்? உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 125 கோடி மக்கள் தொகையில் 80கோடிக்கும் அதிகமானோர், தேர்தல் முறையில் பங்கேற்பது, இதன் ஆணிவேர். நாட்டை நிர்வகிக்க, மக்கள் பிரதிநிதிகளை நேரடியாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலம், பிற பிரதிநிதிகளையும் மறைமுகமாகவும் தேர்வு செய்கின்றனர். மறைமுக தேர்வில், நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவரும் அடக்கம். சுதந்திரம் பெற்ற பின், இன்றுவரை, எத்தனையோ தேர்தல்களை நாடு சந்தித்து உள்ளது. இப்படி நடந்த எல்லா தேர்தல்களும் அரசியல் திருப்பங்களை கொண்டவை. தேர்தலில் வெற்றி பெற, திரைமறைவில் அரசியல் கட்சிகள், சித்து விளையாட்டுகள் மூலம் அதிகாரத்தை கைப்பற்றியதும் அரங்கேறி உள்ளன. இவற்றில் சில சம்பவங்கள், வெளி உலகம் அறிந்தவை. பல அறியாதவை. இந்த அரசியல் நாடகங்கள் பற்றி, பல்வேறு கால கட்டங்களில் பல முன்னாள், இந்நாள் அரசியல்வாதிகள் மற்றும் அரசின் முக்கிய பதவிகளில் இருந்தோர் பதிவு செய்துள்ளனர். அதுபோன்றதொரு தொகுப்பாக, இந்த நூலை எழுதி உள்ளார், நூலாசிரியர். இதில், பல்வேறு சம்பவங்கள் திரட்டித் தரப்பட்டு உள்ளன. காங்கிரசில் சிண்டிகேட், இண்டிகேட் என இருந்த இரண்டு பிரிவுகள், பழைய காங்கிரசாகவும், இந்திரா காங்கிரசாகவும் உருவெடுத்தன. வங்கிகளை தேசிய மயம், மன்னர் மானியம் ஒழிப்பு போன்றவைக்கு, மொரார்ஜி எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்றதும், அரசியல் ரீதியில் மொரார்ஜிக்கு பின்னடைவை ஏற்படுத்தினார் இந்திரா. குடியரசு தலைவர் தேர்தலில் வி.வி.கிரியை வெற்றி பெற வைப்பதற்காக ஜன சங்கத்தில் இருந்த வாஜ்பாய் மூலமாக தந்திர காரியங்களையும் அவர் செய்தார். பழைய காங்கிரசை சேர்ந்தோர், ஜன சங்க ஆதரவு கோரி, வாஜ்பாயை அணுகியபோது, முதலில் ஆதரவளிப்பதாக உறுதியளித்த வாஜ்பாய், பின், வி.வி.கிரியை ஆதரித்தார். இதற்கு அவர் சொன்ன காரணம், பழைய காங்கிரசார் ஆதரவு கேட்பதற்கு முன்பே, இந்திராவுக்கு உறுதி கொடுத்துவிட்டேன் என்பது. வி.வி.கிரியும் வெற்றி பெற்றார். எதிரிகளை வீழ்த்தி, இந்திராவும் வென்றார். இதுபோன்ற பல முக்கிய அரசியல் நிகழ்வுகள், இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளன. உயர்மட்ட அரசியல் நிகழ்வுகளை, இன்றைய இளைய தலைமுறை அறிந்துகொள்ள இந்த நூல் உதவும். நன்றி: தினமலர், 23/8/2015.