பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்
பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ், ச.க. இளங்கோ, பாரிநிலையம், பக். 488, விலை 180ரூ.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் திரைப்படத் துறையிலும் தனது முத்திரைகளைப் பதித்துள்ளார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் முதன்முதலில் திரைத்துறையில் நுழைந்தவர் பாரதிதாசனே. 1937ஆம் ஆண்டு முதன்முதலில் பாலாமணி அல்லது பக்காத்திருடன் படத்துக்குப் பாடல்கள் எழுதினார். 1938இல் எழுத்தாளர் வ.ரா.கேட்டுக்கொண்டதற்கிணங்க ஸ்ரீராமானுஜர் படத்துக்குப் பாடல் எழுதினார். 1940இல் வெளிவந்த காளமேகம் திரைப்படத்தின் கதை, வசனம், பாடல்கள் எழுதியது பாரதிதாசனே. ஓர் இரவு, பராசக்தி, இரத்தக்கண்ணீர், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி உள்ளிட்ட 17 படங்களில் பாரதிதாசனின் பங்களிப்பு இருந்திருக்கிறது. பாரதிதாசனின் திரைத்துறைப் பங்களிப்புகள் பற்றி அறிமுகம் செய்யும் விரிவான கட்டுரைகள், அவர் பங்களித்த திரைப்படங்களைப் பற்றிய விமர்சன நோக்கிலான கட்டுரைகள் என நூலாசிரியரின் அரிய உழைப்பு நம்மை பிரமிக்கவைக்கிறது. ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, வளையாபதி ஆகிய இரு திரைப்படங்களின் திரைக்கதை வசனமும் இந்நூலில் அடங்கியுள்ளன. பாவேந்தர் திரை வாழ்க்கையை அறிய உதவும் அரிய நூல். நன்றி: தினமணி, 20/7/2015.