நபி நேசம் நம் சுவாசம்
நபி நேசம் நம் சுவாசம், மவ்லவி பி.எம். கலீலுர் ரஹ்மான் மன்பஈ, எஸ்.கே.எஸ். பப்ளிகேஷன்ஸ், பக். 186, விலை 100ரூ.
நபிகள் நாயகத்தின் மகத்துவம் எத்தகையது என்பதை, டாக்டர் கலீல் இப்ராஹிம் முல்லா காதிர் என்பவர் எழுதிய ஒரு அரபு நூலின் அடிப்படையில் இந்நூலை ஆசிரியர் உருவாக்கியுள்ளார். மனிதர்களை நல்வழிப்படுத்த வேண்டி, 1,25,000க்கும் மேற்பட்ட தூதர்களை (நபிமார்களை) இறைவன் இவ்வுலகிற்கு அனுப்பியுள்ளான். அதில் முதல் முனிதரும் முதல் நபியுமான ஆதாம் முதல் ஈஸா (யேசு) வரையிலான அனைத்து நபிமார்களும், வேதங்களும் இறுதி நபியாகிய முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி கூறும் முன்னறிவிப்புகள், சிறப்புகள் தக்க ஆதாரங்களுடன் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தவிர, மற்ற இறைத்தூதர்களை விட முஹம்மது நபியே இறைவனின் நேசத்திற்கு மிகவும் உரித்தானவர் என்பதற்கான ஆன்மிக காரணங்களும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. மனிதர்கள் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ் மீது ஆணையாக என்று கூறித்தான் செய்ய வேண்டும். ஆனால், இறைவனோ திருக்குர்ஆனில் பல இடங்களில் நபிகள் நாயகத்தின் மீது சத்தியம் செய்து கூறும் வசனங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது, நபிகளின் கண்ணியத்திற்குச் சான்று கூறுகிறது. அதேபோல் மறுமையில் மனிதர்களுக்கு தீர்ப்பு வழங்கும் நாளில், நபிகள் நாயகத்திற்கு இறைவன் தரும் முக்கியத்துவம் உள்பட சிறப்பான பல விஷயங்கள் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள் மூலம் இந்நூலில் விளக்கப்பட்டள்ளன. இறைவனின் அருளாக இருக்கும் நபிகள் நாயகத்தின் மீது நாம் வைக்கும் நேசமே, நமது சுவாசமாக இருக்க வேண்டும் என்பதை ஆசிரியர் இந்நூலில் அழுத்தமாகக் கூறியுள்ளார். -பரக்கத். நன்றி: துக்ளக், 5/8/2015.